மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிசாமி

3 weeks ago 4

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ?' என தெரிவித்துள்ளார்.

Read Entire Article