
சிம்லா,
இமாசல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் மீது அதே கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பாலியல் புகார் கூறியுள்ளனர். சமீபத்தில் கல்லூரியின் முதல்வர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், அவரை கைது செய்யக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வீடியோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரை கல்லூரி முதல்வர் தகாத முறையில் தொடுவதற்கு முயற்சி செய்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ மாணவ, மாணவிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட அளவிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, கல்லூரி முதல்வர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி தொழில்நுட்பக் கல்வித்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் அக்ஷய் சூட் தெரிவித்துள்ளார். இதனிடையே, சுந்தர்நகர் பொறியியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் அளித்த புகார் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகாரில், பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் முதல்வர் முன்பு தங்கள் கல்லூரியில் பணியாற்றி வந்தபோது தன்னிடமும், சக மாணவிகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இந்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.