திண்டிவனம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மற்றும் தற்காலிக ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திண்டிவனத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு வகுப்பு பொருளாதாரத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் குமார் (47) என்பவர், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 5ம் தேதி பேராசிரியர் குமார், மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. பின்னர், அன்று இரவு 9 மணியளவில் வீடியோ கால் மூலம் மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
ரோசணை இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி சிறுமியை நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றார். அதன் அடிப்படையில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பேராசிரியர் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 17 வயது கொண்ட சிறுமி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், அங்குள்ள விடுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகளுடன் தங்கியுள்ளார். இப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நெய்யமலை பகுதியை சேர்ந்த இளையகண்ணு (37) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அப்பள்ளியில் 10, 11ம் வகுப்பு படித்து வரும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளிமலையை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.
அதில், தன்னிடமும், தனது தோழிகள் 4 பேரிடமும் ஆசிரியர் இளையகண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட மாணவியிடம் கொண்டலாம்பட்டி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உமாபிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சென்று, விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 5 மாணவிகளுக்கு ஆசிரியர் இளையகண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் இளையகண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர்கள் போக்சோவில் கைது appeared first on Dinakaran.