*வட்டார மருத்துவ அலுவலர் பேச்சு
பெரணமல்லூர் : பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் வளர் இளம் பருவ மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. சுகாதார மைய மருத்துவ அலுவலர் அரவிந்தராமன் தலைமை தாங்கினார். பகுதி சுகாதார செவிலியர் சவுந்தரி வரவேற்றார். முகாமை பெரணமல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் துவக்கி வைத்து பேசியதாவது: வளர் இளம் பருவத்தில் உரிய காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். இதனை போக்க இரும்புச்சத்து மாத்திரை உட்கொள்ள வேண்டும். மாணவர்கள் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. போதை பொருட்களை உட்கொண்டு எதிர்காலத்தை சீரழித்துக் கொள்ள வேண்டாம்.
இதனை தவிர்த்து படிப்பில் உரிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சக மாணவ, மாணவிகளிடையே ஏற்படும் பிரச்னைகளை நீங்கள் கண்டறிந்து பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இம்முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது appeared first on Dinakaran.