கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை குழந்தை திருமணத்தை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

2 hours ago 1

*சித்தூர் கலெக்டர் அறிவுரை

சித்தூர் : கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் பேசினார்.

சித்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் சுமித் குமார் தலைமையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் சுமித்குமார் பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் துன்புறுத்தல் மற்றும் ஈவ்டீசிங் நடைபெற்றால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் வாரம்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் புகார் அளிக்க வேண்டும். புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் குழந்தை பராமரிப்பு உதவி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் நடைபெறும் அட்டூழியங்கள் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கவும், குழந்தை திருமணத்தைத் தடுக்கவும் அதிகாரிகள் ஆய்வு செய்து கள அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

வரப்பெற்ற புகார்கள் மீது மண்டல கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க ஆசிரியர்களை கொண்டு ஒரு குழுவை அமைக்க வேண்டும். ஐ.சி.டி.எஸ் நடத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் வலுவான பாதுகாப்பு இருக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் பராமரிப்பு உதவி மையம், பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் அமைக்க மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை அடையாளம் காண கள அளவில் தொடர்புடைய அனைத்துத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் லோக்அதாலத் நீதிபதி பாரதி, ஐசிடிஎஸ் பி.டி.வெங்கடேஸ்வரி, ஜில்லா பரிஷத் முதன்மை செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி சுதாராணி, மாவட்ட கல்வித்துறை அதிகாரி வரலட்சுமி மற்றும் ஏராளமான மண்டல கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை குழந்தை திருமணத்தை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article