
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, பயோகெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணிக்கு இந்திரா என்பவர் விண்ணப்பித்தார். இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சியும் பெற்றார்.
ஆனால், 2022-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி வெளியான இறுதி அறிவிப்பாணையில் பயோகெமிஸ்ட்ரி பாடம் ஆசிரியர் பதவி இடம்பெறவில்லை. இதையடுத்து இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும், தனக்கு பயோகெமிஸ்ட்ரி பாட ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து இந்திரா மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், "தேர்வுக்கான அறிவிப்பில், காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2 பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் பணியிடம் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படிப்பில் மாணவர்களே இல்லாததால், 2 பணியையும் பட்டியலில் இருந்து நீக்கி பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது" என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரருக்கு ஆசிரியர் பணி வழங்கினால், அவர் பாடம் நடத்த மாணவர்கள் இருக்க வேண்டும். வெறும் மேஜைகளுக்கு அவரால் பாடம் நடத்த முடியாது. எனவே, மாணவர்களே இல்லாத பாடத்துக்கு ஆசிரியராக மனுதாரரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. அதனால் தனி நீதிபதி உத்தரவு சரியானது. இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.