மாணவர்களை வெயிலில் செல்ல அனுமதிக்காதீர்கள்: பெற்றோருக்கு கல்வித்துறை வேண்டுகோள்

2 weeks ago 4

சென்னை,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுமுறையில் மாணவ, மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், மாணவ, மாணவிகள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்தவும், சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவர்கள் தொப்பிகளை பயன்படுத்தவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

அதிகபட்ச சூரிய வெப்ப நேரத்தில் அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டாம். விடுமுறை நாட்களில் சில மாணவ, மாணவிகள் தங்கள் உடல் மற்றும் மன நலனை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

தனிமை உணர்வுகளை தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும். டி.வி. மற்றும் செல்போன் ஆகியவற்றை பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழ வகைகளை கொடுக்க வேண்டும். பெற்றோர் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்து சென்று சுமார் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும். மொழி, இசை, நடனம் மற்றும் ஒவியம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்.

அவர்கள் காலை மற்றும் இரவு 2 வேளைகளிலும் பல் தேய்ப்பது, காலை மற்றும் மாலை வேளைகளில் குளிப்பது ஆகிய பழக்கங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கூட்டுக்குடும்பங்களில் அனைவரும் ஒன்றாக சேர்ந்த சாப்பிடலாம். பெரியவர்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகளை பெற்றோருக்கு அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article