*கலைத்திருவிழாவில் மாரிமுத்து எம்எல்ஏ பேச்சு
மன்னார்குடி : தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையானது, கடந்த 2022- 23 கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கலைத்திரு விழா போட்டிகளை நடத்தி வருகிறது.பள்ளி, குறுவள மையம், வட்டாரம், மாவட்டம் என நான்கு கட்டங்களில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கியும், அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலா எனும் பெயரில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சுற்றி காண்பித்து மாணவர்களின் தனித் திறமைகளையும், அறிவினையும் விசாலப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா 3 நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று 1 முதல் 5 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், கதை கூறுதல், மாறுவேடம், மழலையர் பாடல், பேச்சு, திருக்குறள் ஒப்புவிப்பு, மெல்லிசை பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் நடைபெற்றன.
இந்த கலைத் திருவிழா போட்டிகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய குழுத் தலைவர் மணிமேகலை, மாவட்டகல்வி நிலைக்குழு தலைவர் கலைவாணி மோகன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா, ஊராட்சித் தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் இந்திரா காந்தி வரவேற்றார்.
கலைத் திருவிழா போட்டிகளை துவக்கி வைத்து திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து பேசியதாவது, புத்தகங்கள் நம்மை பயமுறுத்தும். ஆனால், அவற்றைக் கண்டு அஞ்சக் கூடாது. தினம்தோறும் அவற்றை வாசித்து வெற்றி பெற வேண்டும். மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் தமிழக அரசு தொடர்ந்து கலைத் திருவிழா போட்டிகளை நடத்தி வருவதும், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதும் மிகுந்த பாராட்டுக்கு உரியது. மாணவர்கள் கல்வியையும், கலையையும் தங்களின் இரு கண்களாக பாவிக்க வேண்டும் என்றார்.
இந்த கலைத் திருவிழாவினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சௌந் திர ராஜன்(பொ) பார்வையிட்டு மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இசை ஆசிரியர்கள் நடன ஆசிரியர்கள் ஆகியோர் செயல்பட்டனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்மன்ற மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல், கூட்டணி வட்டாரத் தலைவர் தங்க பாபு உள்ளிட்ட 104 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலைத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன்று 6ம் வகுப்பு முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கும், நாளை (நவ.07) 9 முதல் 12 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன.கலைத்திருவிழாவினை வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர். முடிவில், தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.
The post மாணவர்களுக்கு கல்வியும், கலையும் இரு கண்கள் appeared first on Dinakaran.