மாட்டின் சிறுநீர் விஞ்ஞான ரீதியிலான அமிர்த நீர்: அடித்துச் சொல்கிறார் தமிழிசை

2 weeks ago 2

சென்னை: விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பற்றி பேசினால் குதி, குதி என்று குதிக்கிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: ஆராய்ச்சிப் பூர்வமாக கோமியத்தில் நுண்ணுயிர்களை தடுக்கும் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் அதை வீட்டின் முன்பு தெளிப்பார்கள். மாட்டின் சிறுநீரான கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என எழுதப்பட்டுள்ளது. அதை, அமிர்த நீர் என்று குறிப்பிடுகிறார்கள்.

நம் தமிழ்நாட்டில் உள்ள சங்க இலக்கியத்தில் மாட்டுச் சாணம் பூசிய முற்றங்கள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? மாட்டுச் சாணத்தில் கிருமிநாசினி இருக்கிறது என்றால், மாட்டின் சிறுநீரிலும் கிருமிநாசினி இருக்கும்தான். நான் ஒரு அலோபதி டாக்டர். நான் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால், ஆயுர்வேதத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்றால் நான் பேச மாட்டேன். ஆராய்ச்சி என்று சொன்னவுடன் அது நியாபகத்துக்கு வந்தது.

உண்மையில் நல்லதை தமிழகம் எடுத்து கொள்ள வேண்டும். மத்திய அரசு திட்டம் என்றாலும் எடுத்து கொள்ள மாட்டிங்க. உண்மையில் ஆராய்ச்சி செய்து இது நல்லது என்று சொன்னாலும் எடுத்து கொள்ள மாட்டிங்க. விஞ்ஞான ரீதியாக அது அமிர்த நீர் என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் உடனே குதி, குதி என்று குதிக்கிறீர்கள். கோமியம் குடிப்பதில் இவர்களுக்கு பிரச்னை இல்லை. டாஸ்மாக் குறைந்து விடுமோ? என்ற பயம் வந்து இருக்கலாம்.

மியான்மர், ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் மாட்டின் சிறுநீரைப் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது. இது ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 50 வகையான காய்ச்சல்களுக்கு கோமியம் மருந்தாக ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில், காமகோடி சொன்ன காய்ச்சலும் ஒரு வகையாக இருந்திருக்கலாமே.

அறிவுப்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்குபவர் சும்மா எதையேனும் சொல்வாரா?.  என் உணவு, என் உரிமை என்று நீங்கள் பேசுகிறீர்கள். ஒரு இடத்தில் மாட்டிறைச்சியை அலுவலகத்தில் தூக்கி வீசுகிறீர்கள். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக கோமியத்தை மருந்து எனச் சொல்லும்போது ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* 909 நாட்களாக விஜய் என்ன செய்து கொண்டிருந்தார்..?
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு செல்ல விஜய் பறந்து போனாரா? இல்லை மறந்து போனாரா?. பரந்தூர் மக்கள் 909 நாட்களாக போராடியபோது விஜய் என்ன செய்துகொண்டிருந்தார்? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

The post மாட்டின் சிறுநீர் விஞ்ஞான ரீதியிலான அமிர்த நீர்: அடித்துச் சொல்கிறார் தமிழிசை appeared first on Dinakaran.

Read Entire Article