மாஜி அமைச்சருக்கு தலையாட்டும் சார்பதிவாளர் அம்மணி மீது புகார் பறப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2 months ago 10

‘‘அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என மாவட்ட செயலாளர் புலம்பித் தவிக்கிறாராமே தெரியுமா…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் ஒரே ஒரு முக்கிய நிர்வாகியான முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய ஆயில் பெயர் கொண்டவர் மட்டும் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர், அவ்வப்போது போஸ்டர் அடிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறாராம்… எப்படியாவது தேனிக்காரர், இலைக்கட்சியை கைப்பற்றி விடுவார். அதன் மூலம் நாமும் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் பவர் புல்லாக வரலாம் என நினைத்தாராம்… இதற்காக தனது சொந்த பணத்தை கட்சிக்காக செலவு செய்து வருகிறார். ஆனால், அது கடைசி வரைக்கும் கைகூடவில்லை. இதனால் தேனிக்காரர் மீது அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்.. தேனிக்காரரை நம்பி அவருடன் சென்றால் தனது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சருக்கு தலையாட்டும் சார்பதிவாளர் அம்மணி மீது புகாருக்கு மேல புகார் கடிதம் பறக்குதமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் மாவட்டம் வனம் பகுதியில் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பதிவாளராக உள்ள அம்மணியை, பக்கத்து கிராமத்திலிருந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்தார்களாம்.. அப்போது தங்கள் ஊரில் வசிக்கும் ஒரு தாய், தனது மகனின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய முயன்றபோது வேறொருவர் போலியாக அந்த மனையில் பட்டா பதிவு செய்திருந்த விவரத்தை கூறி நியாயம் கேட்டார்களாம்.. அதற்கு அந்த பெண் மணியோ, உரியவருக்கு அதை பதிவிடாமல் மாவட்ட மாஜி அமைச்சருக்கு சாதகமாக, தனக்கு அதிகாரமில்லை என கைகழுவி விட்டாராம்.. இதனால் அதிர்ச்சிக்குள்ளான குடும்பமும், பிரதிநிதிகளும் நீதிமன்ற தீர்ப்பை கையில் வைத்துக் கொண்டு, ஒரு வருடமாக நடையாக நடந்து சென்று அலைந்தும் அப்பெண்மணி பாரா முகமாகவே இருக்கிறாராம்..

சில நேரங்களில் மரியாதை குறைவாக விவசாய பிரதிநிதிகளிடம் பேசவே ஒட்டுமொத்த வேதனையில் இருக்கிறார்களாம் அந்த கிராம தரப்பு.. இதன் எதிரொலியாக முதல்வர், துணை முதல்வருக்கு புகார் கடிதங்கள் பறந்துள்ளதாம். அதில் தங்களது கொந்தளிப்பை பதிவிட்டுள்ளதோடு, மாஜிக்கு தலையாட்டும் பொம்மையாக உள்ள அந்த அம்மணி இறந்தவர்கள் பெயரில்கூட கிரயம் கொடுப்பதாகவும், இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் குமுறியுள்ளார்களாம்.. புரம் மாவட்டத்துக்கு விரைவில் வரும் முதல்வரை நேரில் சந்திக்கும் திட்டத்திலும் இருக்கிறதாம் பாதிக்கப்பட்ட தரப்பு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கலெக்டரிடம் புகார் கொடுத்த பிறகும்கூட பேரூராட்சி செயல் அதிகாரியின் ஆட்டம் எல்லை மீறி போவதால் தலைவர், கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்குறாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடைக்கோடி மாவட்டத்தில் அமைந்துள்ள மாமுனிவர் பெயர் கொண்ட பேரூராட்சியில் மன்னர் பெயரில் உள்ள செயல் அதிகாரியின் ஆட்டம் எல்லை மீறி செல்கிறதாம்.. அவர் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், அவர்கள் பரிந்துரைக்கும் எந்த வேலையையும் செய்வது இல்லையாம்.. அரசாணைக்கு விரோதமாக முறைகேடாக கட்டிட உரிமங்கள் வழங்கியுள்ளதாகவும், அந்த உரிமைகளை ரத்து செய்ய பேரூராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அவை ரத்து செய்யப்படவில்லையாம்.. தலைவர், கவுன்சிலர்கள் பேரூராட்சி உதவி இயக்குநரிடம் புகார் கொடுத்து இருக்காங்க… நடவடிக்கை இல்லாததால் அவர்கள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றாங்களாம்.. கலெக்டர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால் அந்த அதிகாரி மேலும் முறைகேடாக கட்டிட அனுமதி வழங்குதல், பணம் வசூலிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாராம்.. அதிகாரியின் அராஜக போக்கை கட்டுப்படுத்த வேண்டும்னு மீண்டும் தலைவர், கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறுமி கூட்டு பலாத்காரத்துல எல்லை தெரியாமல் திணறிய காக்கிகளை லெப்ட் ரைட் வாங்கினாராமே மூன்று ஸ்டார் காக்கி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டம் பள்ளிகொண்ட ஏரியாவுக்கு பக்கத்துல உள்ள கிராமத்துல 14 வயது சிறுமிய 3 பேர் கூட்டு பலாத்காரம் செஞ்சுட்டாங்க.. இதுதொடர்பாக புகார் அளிக்க 2 நாளுக்கு முன்பு அருகிலுள்ள பள்ளிகொண்ட காவல் நிலையத்துக்கு பெற்றோருடன் வந்த சிறுமியிடம் 1 மணி நேரம் விசாரிச்ச காக்கிகள், காரில் கூட்டிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து போனாங்க.. ஆனா சம்பவம் நடந்த இடம் எந்த காவல் நிலைய எல்லையில வருதுன்னு தெரியாம காக்கிகள் திணறிட்டாங்களாம்.. உடனே வருவாய்த்துறை அதிகாரிகளை வரவச்சு இந்த கேஸ் எந்த போலீஸ் லிமிட்ல வருதுன்னு கேட்டிருக்காங்க..

அவங்களும் எல்லை தெரியாம திணறிய நிலையில, பள்ளிகொண்ட காவல் நிலையத்துக்கும், வேப்பமான காவல் நிலையத்துக்கும் காக்கிகளும், புகார் அளிக்க வந்தவங்களும் மாறி மாறி அலைஞ்சு இருக்காங்க.. இந்த தகவலறிந்த பள்ளிகொண்ட 3 ஸ்டார் காக்கி அதிகாரி, காவலர்களை லெப்ட் ரைட் வாங்கிட்டாராம்.. அதோடு இந்த வழக்கு சிறுமி சம்பந்தப்பட்டது. எனவே புகார்தாரர்களை உடனடியாக வெயிலூர் ஆல் உமன் காவல் நிலையத்துக்கு அனுப்புங்கன்னு சொல்லி இருக்காங்க.. அங்கு கேஸ் போட்டு இரவோடு இரவா 3 குற்றவாளிகளை போலீசார் கைது செஞ்சாங்க.. குற்றம் நடந்தது எந்த லிமிட்னு கண்டுபிடிக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் திணறிய சம்பவம்தான் இப்போ வெயிலூர்ல பரபரப்பா பேசப்படுது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post மாஜி அமைச்சருக்கு தலையாட்டும் சார்பதிவாளர் அம்மணி மீது புகார் பறப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article