டெல்லி : மசோதாவை மறுஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பினால் முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மசோதா, கோப்புகளுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதம் செய்வதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதங்களை முன்வைத்தார். அதில், “பல்கலை. துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற மசோதா மீது அவரே நீதிபதியாக செயல்படுகிறார்.
ஆளுநர் தனது சுய முடிவையோ அல்லது மத்திய அரசின் முடிவையோ எடுக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? ‘நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை’ என்று ஆளுநர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்?.மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?.மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பினால், ஜனாதிபதி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம்?,”இவ்வாறு தெரிவித்து, ஆளுநருக்கு எதிரான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
The post “மசோதா மறு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டால் கிடப்பில் போட்டு மவுனமாக இருக்கலாமா?” : ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.