பிரம்மாண்ட நீலகண்டேஸ்வரர்!

2 hours ago 1

நெய்வேலி ஒரு சிறிய ஊராகும். இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் புதுக்கோட்டை நகருக்கு தென்மேற்கில் சுமார் 25கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடகிழக்கில் சுமார் 14 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ள ஊராகும். வயலும் வயல் சூழ்ந்த நிலப் பரப்பையும் உடைய ஊராக இவ்வூருக்கு நெல்வேலி என பெயர் வழங்கப்பெற்று, நெய்வேலி என்ற பெயர் தற்போது வழங்கப்படுகிறது. ஒரே பகுதியில் ஒரே பெயரில் இரண்டு அடுத்தடுத்து அமையும் போது ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுத்தி காட்டுவதற்காக திசை அடிப்படையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கு, வடக்கு என்று பாகுபடுத்தி மேற்கு மேல் என்றும், கிழக்கு என்பதை கீழ் என்றும் முன் ஒட்டு சேர்க்கப்பட்டு புதுக்கோட்டை பகுதியில் மேல்மன நல்லூர், கீழ்மன நல்லூர், மேலத்தாணியம், கீழத்தாணியம், மேலப்பனையூர் – கீழப்பனையூர் என்ற பெயர்களில் புதுக்கோட்டைப் பகுதியில் ஊர்கள் வழங்கப்படுவது போல இங்கும் மேல் நெல்வேலி, கீழ்நெல்வேலி என்ற ஊர்கள் ஏற்பட்டுள்ளது போல மேல்நெல்வேலி, மீளவேலி, கீழ்நெல்வேலி நெய்வேலி என்றும் வழங்கிவருகின்றன.

நெய்வேலியில் ஊருக்கு வடபுறம் உள்ள ஊரணியின் வடகரையில் இடிந்து கிடக்கும் சிவன் கற்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரை கீழ்நெல்வேலி என்றே கூறுகின்றன. இக்கோயிலில் இச்சிமரம் முளைத்தும், மனிதர்கள் உள்ளே செல்லமுடியாதபடி செடியும், கொடியும் வளர்ந்து வனக்காடாக காட்சி தருகிறது. இடிந்து கிடக்கும் கோயிலின் கட்டடக்கலையை பொறுத்து அடித்தளத்தில் உபாணம், ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம் பட்டி சுவர் போதிகை, கூரை ஆகியவைகளைக் கொண்ட தேவகோட்டங்கள், அரைத்தூண்கள் இல்லாதும் கருவறை அர்த்தமண்டபம், முன் மண்டபம் ஆகிய அமைப்பினைக் கொண்டும், முன் மண்டபம் தூண்களால் அமைந்த திறந்த வெளி மண்டபமாகவும் இக்கோயில் மேற்கு பார்த்த கோயிலாகவும், வர்க்க வேலைப்பாடுகள் இல்லாது எளிமையான முறையில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறையின் மேல் விமானம் இல்லை. விமானத்திற்கு பதிலாகதான் நான் விமானமாக நிற்கிறேன் என பெரிய இச்சி மரம் நான்கு வளர்ந்த கிளைகளுடன் பச்சை பசேலென்று காட்சி தருகிறது. இக்கோயில் இடிந்து சிதிலமடைந்ததை முன்னிட்டு சில ஆண்டுகளுக்கு முன் அருகிலுள்ள இதே ஊரணியின் மேலக்கரையில் செங்கல் கட்டுமானத்தில் ஒரு கோயிலை கட்டியெழுப்பி குடமுழுக்கு நடத்தினர்.

அதில் லிங்கத்தை மையமாக லிங்கம், அம்பாள், முருகன், மூலைப் பிள்ளையார், நந்தி, சேஷ்டாதேவி ஆகிய சிலைகளை வைத்து தெற்கு, வடக்கில் ஐந்து அறைகளை ஏற்படுத்தி லிங்கத்திற்கு இடப்புறத்து அறையில் அம்பாளும், சுப்பிரமணியரும், லிங்கத்திற்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தனி முருகனும் சேஷ்டாதேவியும் இருந்து அருள் பாலித்து வருகின்ற மாதிரி அமைத்தனர். இப்போது அந்த கோயிலில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பிரதோஷம், மஹாசிவராத்திரி போன்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. சிவன் திருநாமம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார். இடிந்து கிடக்கும் கற்கோயிலின் முப்பட்டைக் குமுதப்பட்டையில் கங்கை கொண்டான் என்றும் கடாரங்கொண்டான் என்றும் போற்றப்படும் முதலாம் ராஜேந்திரனின் 10வது ஆட்சியாண்டு கல்வெட்டு முந்திய கல்வெட்டாகும். அக்கல்வெட்டு முதலாம் ராஜேந்திரனின் 10வது ஆட்சியாண்டில் ஆரூர்மாதேவடிகள் இக்கோயிலில் வழிபாட்டின் போது விளக்கு எரிப்பதற்கு நெல்வேலிவயல் விளக்கு புறமாக நிலக்கொடை வழங்கியதை தெரிவிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக இடிந்த கற்கோயிலின் கருவறையிலுள்ள திருநிலைக்காலில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு நிஷதராயன் கொடுங் குன்றமுடையான் என்பவர் பசுமை வயலை சர்வ மானியமாக விட்டதை தெரிவிக்கின்றது. பசுமை வயல் இன்றைக்கு விஷமுள்ளி வயல் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலுள்ள சேஷ்டாதேவி சிலையின் நெஞ்சுப்பகுதியிலுள்ள கல்வெட்டில் கொடும்பாளுர் செட்டிகளில் நிம்மகுச்சன் பெயர் காணப்படுவதால் இச்சிலையினை செய்து கொடுத்தவர் கொடும்பாளுர் நிம்மகுச்சன் என்ற செட்டியார் எனக் கருதலாம். இக்கல்வெட்டு கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.நெய்வேலி ஊரின் மையத்திலுள்ள ஒரு தூண் கல்வெட்டு அச்சுததேவர் மகாராயன் காலத்தைச் சேர்ந்தது. அக்கல்வெட்டில் பொன்னமராவதி நாட்டு வடபற்று பனையூர் குளமங்கலம் உடையார் எனக்கண்டுள்ளது. பனையூர் சிவன்கோயிலின் சுவாமி கோயில் மண்டபத்தின் தெற்கு முப்பட்டைக் குமுதத்திலுள்ள வீரநரசிங்கராயரின் சகாத்தம் 1435க் கல்வெட்டொன்றில் பனையூர் அறிவீஸ்வரமுடையார் கோயில் கால சந்தி பூஜைக்கு நெய்வேலி பெருந்தன எல்லைக்குட்பட்ட நிலம் கொடையாக கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. நெய்வேலியில் நடப்பட்ட அச்சுதராயர் கல்வெட்டை மேலப்பனையூர் அறிவீஸ்முடையாரு; கல்வெட்டு உறுதிசெய்கிறது.

புதுகை பொ.ஜெயச்சந்திரன்

The post பிரம்மாண்ட நீலகண்டேஸ்வரர்! appeared first on Dinakaran.

Read Entire Article