இந்தியாவில் 4,416 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து நாளொன்றுக்கு 1.60 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் 31.7 சதவீத குப்பைகள் என்ன செய்யப்படுகிறது என்ற தரவுகள் இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கொட்டுவதற்கு போதிய இடம் இன்றி ஏரிகள், ஆறு மற்றும் கால்வாய் கரைகளில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இது தொடர்பான வழக்குகளில் குப்பைகளை கொட்ட மாற்று இடங்களை தேர்வு செய்யாவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தாலும், "அபராதத்தை கூட செலுத்திவிடுகிறோம். எங்களால் இடத்தை தேர்வு செய்ய முடியவில்லை" என உள்ளாட்சி அமைப்புகள் பதில் அளிக்கின்றன. அந்த அளவுக்கு குப்பை மேலாண்மை, நகரப்புற உள்ளாட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.