சென்னை: அதிமுக கொடியைப் போல அமமுக கொடியை வடிவமைக்க தடை கோரியும், ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த வி.கே.சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது அதிமுக கொடி வடிவில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.