
காரைக்கால்:
புனிதவதியார் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு காரைக்கால் அம்மையாரே, மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட புனிதவதி மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியையொட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான மாங்கனி திருவிழா நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று காலை பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்வான மாங்கனி இறைத்தல் நாளை (10.7.2025) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பிச்சாடனர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பிச்சாடனர் வீதி உலா வருவார். அப்போது மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் இருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசுவார்கள். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்வார்கள்.
குறிப்பாக, குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாத பெண்கள், இந்த மாங்கனிகளை தங்களது சேலை முந்தானையை விரித்து தாங்கிப் பிடிப்பர். அந்த மாங்கனியை சாப்பிடுவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.