லாகூர்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பி பிரிவில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய ஆப்கன் 273 ரன் எடுத்தது. பின், ஆஸி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 109 ரன் குவித்தது.
அப்போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. அரை மணி நேரத்தில் மழை நின்ற பிறகும் மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. நீரை வெளியேற்ற மாப், ஸ்பாஞ்ச் உள்ளிட்டவற்றை வைத்து பணியாளர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்தும் பலனில்லை. போட்டி நடக்கும் பிட்ச் மீது மூடப்பட்டிருந்த பெரியளவிலான போர்வையை பணியாளர்கள் அகற்றியபோது அதில் தேங்கியிருந்த நீர், பிட்ச் மீது விழுந்து தேங்கிக் கிடந்தது. அதனால் போட்டி கைவிடப்பட்டது. அதையடுத்து, பி பிரிவில் முதல் அணியாக அரை இறுதிக்கு ஆஸி தகுதி பெற்றது.
வெறும் அரை மணி நேரம் பெய்த மழை நீரை வெளியேற்ற முடியாததை கண்டு வெகுண்டெழுந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆவேசங்களை கொட்டித் தீர்த்தனர். ‘பிட்சை மூட போர்வை வைத்திருக்கும் உங்களுக்கு அதை அகற்ற போதிய மூளை இல்லாமல் போனதே’ என்று ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ‘பாக். கிரிக்கெட் வாரியத்தால் அரை மணி நேரம் பெய்த மழை நீரை கூட வெளியேற்ற முடியாத அளவுக்கு மோசமாக, வடிகால் வசதிகள் எதுவும் செய்யப்படாத நிலை உள்ளது’ என மற்றொருவர் பதிவிட்டிருந்தார்.
The post மழையால் போட்டி நின்ற விவகாரம்; என்ன கண்றாவி இது? பிசிபியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் appeared first on Dinakaran.