நாகப்பட்டினம்: நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தள்ளாடியது. அப்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியது. இதனால் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் தப்பினர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கடந்தாண்டு நவம்பர் 18ம்தேதி முதல் நிறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1 முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது. வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானது. இதனால் கப்பல் கடலில் தள்ளாட ஆரம்பித்ததால் பயணிகள் அலறினர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கேப்டன் பாஸ்கர் திருப்பினார்.
இதனால் 78 பயணிகள், 17 பணியாளர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை தொடர்ந்து நேற்று(2ம் தேதி) மற்றும் இன்று (3ம்தேதி) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் இது போன்ற சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
The post நாகையில் இருந்து இலங்கை சென்றபோது கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தள்ளாடிய பயணிகள் கப்பல் பாதியிலேயே திரும்பியது appeared first on Dinakaran.