புதுச்சேரி: புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக வில்லியனூர் பைபாஸ் சாலையில் இருந்த எம்ஜிஆர் சிலை கடந்தாண்டு அக்டோபர் 11ம் தேதி இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதை கண்டித்து அதிமுக சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், சாலை விரிவாக்கத்திற்குபின் மீண்டும் எம்ஜிஆர் சிலை வைக்கப்படும் என்று அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதேபோல், வில்லியனூர் பைபாஸ் சாலையோரத்தில் மீண்டும் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த அதிமுக உரிமை மீட்பு குழுவினர், எம்ஜிஆர் சிலை திறக்கும்போது எங்களது பெயரும் கல்வெட்டில் இடம்பெற வேண்டும். நாங்களும் அதிமுகவினர் தான் என மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு அளித்தனர். இதனிடையே எந்தவித முன்னறிப்புமின்றி கடந்த 28ம் தேதி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் திறக்கப்பட்ட சிலைக்கு மீண்டும் திறப்பு விழா நடத்த நேற்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக உரிமை மீட்பு குழுவினர் முடிவு செய்தனர். இதையறிந்த போலீசார் நேற்று காலை முதல் எம்ஜிஆர் சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தனர். இதனிடையே அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை மீண்டும் திறந்து கல்வெட்டு வைக்க நேற்று ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஓபிஎஸ் ஒழிக என கோஷம் எழுப்பினர். இதனால் அதிமுகவினருக்கும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இதையடுத்து மேற்கு எஸ்.பி. வம்சித ரெட்டி தலைமையிலான போலீசார் ஓம்சக்தி சேகரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை ஏற்காமல் இருதரப்புக்கும் மோதல் உருவாகவே ஓபிஎஸ் அணியினரிடம் இருந்து கல்வெட்டை பறிமுதல் செய்ததோடு ஓம்சக்தி சேகர் உள்பட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
The post திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை மீண்டும் திறக்க முயற்சி அதிமுக, ஓபிஎஸ் தரப்பினர் தள்ளுமுள்ளு, வாக்குவாதம்: புதுச்சேரியில் முன்னாள் எம்எல்ஏ உள்பட 20 பேர் கைது appeared first on Dinakaran.