சென்னை,
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக தவறான தகவல்களை தர வேண்டாம் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்திருந்தால் சந்தோஷம்தான். ஆனால் நிலவரம் அவ்வாறு இல்லை. இவ்வாறு தவறான தகவல்களை தர வேண்டாம்.
மழைக்காலம் வருவதற்கு முன்பாக அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. இல்லையென்றால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை வரும். பல வருடங்களாக சென்னையில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தவறான தகவல்களை சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், சாலைகள் அனைத்தையும் அரசு சீர்செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதே போல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், "சென்னையில் சாலைகள் எல்லாம் பள்ளமாக இருக்கிறது. மழைநீர் தேங்கினால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரிவது கிடையாது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டது என்று கூறுவதற்கு பதிலாக, உண்மையிலேயே மக்களின் சிரமங்களை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.