மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான 1913 என்ற எண்ணுக்கு 150 கூடுதல் இணைப்பு: மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் தகவல்

3 months ago 18

சென்னை: மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணானது, தற்போது 150 கூடுதல் இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் மேயர், துணை மேயர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் விடுபட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி, சாலை சீரமைப்பு பணி குறித்தும், கடந்த மழையின்போது மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கூடுதல் மோட்டார் பம்புகள், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 169 நிவாரண மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல், பொதுமக்களுக்கு உணவளிக்கும் வகையில் வட்டார அளவில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 35 பொது சமையலறைகள் மற்றும் 200 வார்டுகளில் உள்ள உணவு தயாரிக்கும் சமையலறைகள் குறித்தும், தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் காரணமாக மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 25 இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக விழும் நிலையில் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், நீர்வளத்துறை மற்றும் ரயில்வே துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி, சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 6 சுரங்கப்பாதைகளில் மழைநீரினை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் மழைக்காலங்களில் பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக வரும் புகார்களை பெற்று மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மழைமானி, வெள்ள உணரி, முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைமையிடத்தில் தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, மழைக்காலங்களில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணானது, தற்போது 150 கூடுதல் இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 9445551913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) விஜயா ராணி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், துணை ஆணையாளர்கள் பிருதிவிராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான 1913 என்ற எண்ணுக்கு 150 கூடுதல் இணைப்பு: மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article