நன்றி குங்குமம் தோழி
இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஏதேனும் துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கேற்ப ஏராளமான வாய்ப்புகள் பல துறைகளில் கொட்டிக் கிடக்கிறது. குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் அதே சமயம் தங்களின் தொழிலிலும் திறன்பட கோலோச்ச வேண்டும் என்று நினைப்பது மட்டுமில்லாமல் அதனை திறம்பட நிர்வகித்தும் வருகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் கண்மணி தனசேகர். சென்னை மற்றும் கனடா என பல துறைகளில் சாதனைப் படைத்து வரும் இவர் ரெடி டூ ஈட் உணவுகளை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்.
‘‘நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். பொலிடிக்கல் சயின்ஸில் முதுகலைப் பட்டம் படித்திருக்கிறேன். அதில் நான் யூனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட். படிப்பை முடித்துவிட்டு ஆட்டோமொபைல் துறையில் மேலாளராக பணியாற்றி வந்தேன். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் கனடாவில் வசிக்க ஆரம்பித்தேன். அங்கு சென்ற பிறகு சும்மா இருக்க பிடிக்காமல் இமிக்ரேஷன் படிப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றேன்.
அதனைத் தொடர்ந்து குடியேற்ற ஆலோசகராக இருக்கிறேன். கணவரும் சொந்தமாக தொழில் செய்து வந்ததால், எனக்கும் அவரைப் பார்த்து சிறிய அளவில் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு முதல் படியாக கனடாவில் எனது வேலையினை துவங்கினேன். ‘என்.ஆர்.ஐ முகூர்த்தம்’ என்ற பெயரில் திருமண தகவல் மையத்தினை துவங்கினேன். தற்போது ரெடி டூ ஈட் உணவுகளை அறிமுகம் செய்துள்ளேன்.
ரெடி டூ ஈட் உணவுகள் இந்தியாவிற்கு புதிதல்ல. இங்கு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது போன்ற உணவுகள் உள்ளன. அதில் நம்முடைய பொருள் எவ்வளவு தரமாக இருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். நான் ரெடி டூ ஈட் உணவுகளை ஆரம்பிக்க காரணம், பெண்கள் எப்போதும் சமையல் செய்து கொண்டே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு என் உணவுகள் விடையாக இருக்க விரும்பினேன். அவர்களின் வேலையினை சுலபமாக்கதான் எங்களது ‘மிஸ்டர் இட்லி மிஸஸ் சாம்பார்’ பெயரில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கி உள்ளேன். இதனை தற்போது ஆன்லைன் முறையில்தான் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறேன்’’ என்றவர் உணவு தயாரிப்பு முறை குறித்து விவரித்தார்.
‘‘நாங்க இந்த உணவுகளை Retort தொழில்நுட்பம் முறையில்தான் தயாரிக்கிறோம். அதனால் பதினெட்டு மாதங்கள் வரை கெடாது. பொதுவாக ஒரு உணவுப் பொருட்களை பிரித்தால் நாளடைவில் அதன் தரம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் எங்களின் உணவுப் பொருட்கள் எப்போது பிரித்தாலும் அதன் சுவை மற்றும் தரத்தில் மாற்றம் இருக்காது. அப்போதே தயாரித்து பேக்கிங் செய்தது போல் புத்தம் புதியதாக இருக்கும்.
அதுதான் எங்களின் சிறப்பம்சம். பேச்சுலர்கள், நெடும் தூரம் பயணிப்பவர்கள், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும். தற்போது இனிப்பு வகைகள், சிறுதானியம், சைவம் கிரேவி உணவுகள், பிரியாணி போன்ற உணவுகள், சூப்கள், சிற்றுண்டி உணவுகளை விற்பனை செய்கிறோம். அதில் பெண்களின் நலன் கருதி பூங்கார் அரிசியில் கஞ்சி, ரம்ஜான் கஞ்சியும் உள்ளது. இதனைத் தொடர்ந்து வீகன், சைவம், அசைவம், சிறுதானிய கஞ்சி வகைகள் என 100க்கும் மேற்பட்ட உணவுகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
சாதாரணமாக வீடுகளில் தயாரிக்கும் உணவு முறைகளைதான் பின்பற்றி வருகிறோம். தரமான செக்கு எண்ணெய்கள் தான் பயன்படுத்துகிறோம். எந்தவித செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதில்லை. உணவின் தரம் மாறாமல் இருக்க நாங்க பல ஆய்வினை மேற்கொண்டோம். அதன் பிறகுதான் உணவுத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தோம்’’ என்றவர் தன் எதிர்கால திட்டத்தினை விவரித்தார்.
‘‘தற்போது சென்னை தி.நகரில் எங்களின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேரடியாக வந்து உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறோம். பொடி மற்றும் மசாலா வகைகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். டாக்டர் நாச்சிமுத்துவுடன் இணைந்து ஆவாரம்பூ, முருங்கை மற்றும் சிறுதானியங்கள் கொண்டு மேலும் புதிய உணவுகளை தயாரிக்க உள்ளோம். தற்போது எங்க நிறுவனத்தில் பெண்கள் வேலை பார்த்து வந்தாலும், மேலும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக மலைவாழ் பெண்களுக்கு… இப்படி பல திட்டங்கள் உள்ளது. அதனை ஒவ்வொன்றாக வரும் ஆண்டுகளில் நிறைவேற்றுவோம்.
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. அதனை உடைத்தெறிந்து பெண்கள் சாதிக்க வேண்டும் என்று முயற்சிக்க வேண்டும். ஒரு பெண் முன்னேறினால் அந்த வீடும் ஊரும் ஏன் நாடே முன்னேறும். அதனால் பெண்களை ஊக்குவித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற என்னால் முடிந்த உதவியினை செய்ய இருக்கிறேன்’’ என்று கூறும் கண்மணி, பெண் சாதனையாளர், மெரிடோரியஸ், எக்ஸலன்ஸ் இன் எஜுகேஷன் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
The post மலைவாழ் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்! appeared first on Dinakaran.