வருசநாடு: தேனி மாவட்ட மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம் வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். காட்டு யானைகள் அதிகம்: ேகரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது.
இதேபோல், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் காட்டுயானை அடித்து நொறுக்குகிறது. மூணாறில் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பண்ணைப்புரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.
வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சுற்றித்திரியும் கரடி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பகல்நேரத்திலேயே சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.
The post மலைக்கிராமங்களில் தொடரும் வனவிலங்குகள் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.