சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் வன்முறையைக் குறைக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மத்தியகுற்றப்பிரிவு, கூடுதல் ஆணையாளர் A.ராதிகா அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் G.வனிதா வழிகாட்டுதலின் பேரில் நேற்று (04.07.2025) மாலை, சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள Justice Basheer Ahmed Sayeed College for Women கல்லூரியில் சுமார் 300 மாணவிகளுக்கு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்தும் அவற்றை முன்கூட்டியே அறிந்து தடுப்பது பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், வரதட்சணை தடுப்பு பிரிவு (Anti Dowry Cell) உதவி ஆணையாளர் ரித்து சிறப்பு விருந்தினராகவும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) ஆய்வாளர் S.மகாலட்சுமி மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டு, பாலியல் தொல்லை, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடந்துகொள்ளும் விதம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்தும் விளக்கினர்.
மேலும் கல்லூரி மாணவிகள் அவசர உதவிக்கு காவல் உதவி app பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, பெண்களுக்கான உதவி எண்.1091, குழந்தைகளுக்கான உதவி எண்.1098 ஆகிய அவசர அழைப்புகளை பயன்படுத்தி பயனடைவது குறித்தும் விளக்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 300 மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை காவல் துறை சார்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.