திருவண்ணாமலை, அக்.9: திருவண்ணாமலை மலை மீதுள்ள ஆசிரமத்துக்கு சென்ற கேரள பக்தர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். கேரள மாநிலம், எர்ணாகுளம் கச்சேரிபடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கிருஷ்ணந்து(45). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 5ம் தேதி திருவண்ணாமலைக்கு கோயில் மற்றும் ஆசிரமங்களை தரிசிப்பதற்காக வந்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தியானத்தை முடித்துவிட்டு, மலைப்பகுதியில் உள்ள கந்தாஸ்ரமத்தை தரிசிப்பதற்காக மலை மீது ஏறிச்சென்றார். ஆஸ்ரமத்துக்கு அருகே சென்றபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்து மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். முகத்தில் தண்ணீர் தெளித்தும் அசைவற்றுக் கிடந்தார். எனவே, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து சென்று மயங்கி கிடந்த கிருஷ்ணந்துவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக, கிருஷ்ணந்துவின் தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மலை மீது ஏறிய கேரள பக்தர் மயங்கி விழுந்து பலி திருவண்ணாமலையில் ஆசிரமத்தை தரிசிக்க appeared first on Dinakaran.