*அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை
சிவகாசி : பெரும்பாலான பஸ்கள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாததால் பயணிகள் கடுமையான மன உளைச்சலை சந்தித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய் அருகில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடியே 45 லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகங்கள், சுகாதார வளாகங்கள், பொருட்கள் பாதுகாக்கும் அறை, டிரைவர், நடத்துனர் ஓய்வு அறை, குடிநீர் வசதிக்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி, உயர்கோபுர மின் விளக்குகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பதி, திருச்செந்தூர் உட்பட 9 புண்ணிய தலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்கள் மட்டுமே இங்கு பஸ்கள் வந்து சென்றன. அதன் பின்னர் பஸ் ஸ்டாண்ட் காட்சிப் பொருளாகவே காணப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் சேதம் அடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஒருசில நாட்கள் மட்டுமே முழு பயன்பாட்டில் இயங்கிய பஸ் ஸ்டாண்டில் நாளடைவில் பல தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளே வராமல் மெயின்ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்தும் எந்தவித பலனும் அளிக்கவில்லை. தற்போதுவரை அதிகாரிகளுக்கு பயந்து ஒருசில பஸ்கள் மட்டுமே பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருகின்றன.
பெரும்பாலான பஸ்கள் பயணிகளை வெளியிலேயே இறக்கி விட்டு சென்று விடுகின்றன. திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் உள்ளே வரும் என நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைகின்றனர். அடுத்த பஸ் உள்ளே வருமா, வராதா என சந்தேகத்தில் எங்கே நிற்பது என்று பயணிகள் அங்கும் இங்கும் அலைந்து மன உளைச்சலை சந்திக்கின்றனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பெரும் அலைச்சலை சந்திக்கின்றனர். அதிகாரிகளுக்கு பயந்து டவுன் பஸ்கள் மற்றும் ஒருசில பஸ்கள் மட்டுமே பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருகின்றன.
இதனால் பஸ், பயணிகள் இல்லாததால் டீக்கடை, ஓட்டல் கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் மீண்டும் இந்த பஸ் ஸ்டாண்ட் பயன்பாடின்றியே போய்விடும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post திருத்தங்கல்லில் பயணிகள் அவதி பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள் appeared first on Dinakaran.