மலேசிய மகளிரை வெல்ல ஆடிய பந்துகள் 17: டி20யில் இந்தியா அமர்க்களம்

2 weeks ago 2


கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று மலேசியாவை எதிர்கொண்ட இந்திய மகளிர் வெறும் 17 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வெறும் 26 பந்துகள் மட்டுமே வீசி வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி நேற்றைய போட்டியில் மலேசியா மகளிரை எதிர்கொண்டனர். டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய மகளிரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலேசியா வீராங்கனைகள் மிக மோசமாக ஆடி அவுட்டாகினர். அதிகபட்சமாக நுார் அலியா பின்டி முகம்மது ஹைரூன் 5, நஸதுல் ஹிதாயத் 5 ரன் எடுத்தனர்.

மூவர் பூஜ்யத்திலும், இருவர் 1 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால், 14.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மலேசியா 31 ரன்களில் சுருண்டது. இதையடுத்து, 32 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். துவக்க வீராங்கனைகள் கொங்காடி திரிஷா 27, தமிழகத்தின் கமாலினி 4 ரன் எடுத்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தனர். வெறும் 17 பந்துகளை மட்டுமே சந்தித்து இந்திய வீராங்கனைகள் இந்த வெற்றியை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளனர். 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகி.

The post மலேசிய மகளிரை வெல்ல ஆடிய பந்துகள் 17: டி20யில் இந்தியா அமர்க்களம் appeared first on Dinakaran.

Read Entire Article