வேலூர், பிப்.25: வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 22 இடங்களில் மலிவான விலையில் முதல்வர் மருந்தகங்கள் நேற்று திறக்கப்பட்டது. காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். காட்பாடி-சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் முதல்வரின் மருந்தக திறப்பு நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மருந்து விற்பனையை தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா, டிஆர்ஓ மாலதி, துணை மேயர் சுனில்குமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, கவுன்சிலர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் 12 கூட்டுறவு சங்கங்கள், 10 தனியார் தொழில்முனைவோர்கள் மூலம் 22 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானிய தொகையாக ₹2 லட்சம், தொழில் முனைவோர் மற்றும் மருந்தாளுனர்களுக்கு மானியமாக ₹3 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் உள் கட்டமைப்புக்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம், ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்து மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலம் மாவட்ட கிடங்கில் இருந்து முதல்வர் மருந்தகத்திற்கு மருந்துகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு சந்தை விலை ஏற்றத்தை கட்டப்படுத்தும் நோக்கில் தரமான மருந்துகள் மிகவும் மலிவான விலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருந்தகங்கள் செயல்படும். வேலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் இந்த முதல்வர் மருந்தகங்கள் செயல்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மலிவான விலையில் 22 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு காட்பாடியில் அமைச்சர் பங்கேற்பு வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் appeared first on Dinakaran.