மலர் கண்காட்சி கலை நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த திபெத்திய மக்களின் நடனம்

4 hours ago 3

ஊட்டி, மே 16: கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் கோடை விழா நிகழ்ச்சிகள் கடந்த 3ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டிகள், ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நடந்தது.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. கோடை விழா நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார். மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக பூங்காவில் கார்னேசன், ரோஜா, கிரசாந்திமம் உள்ளிட்ட சுமார் 7 லட்சம் மலர்களை கொண்டு சோழ மன்னர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் வண்ணம் பொன்னியின் செல்வன் கோட்டை அலங்காரம், அரண்மனை நுழைவுவாயில் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னப்பறவை ரதம், பீரங்கி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் படுகர் சமுதாய மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் கலாச்சார நடனம் நடந்தது. பின்னர் ஊட்டி வாழ் திபெத் மக்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. வித்தியாசமான இசையுடன் வண்ண வண்ண உடையணிந்து திபெத்திய பெண்கள் நடனமாடினர். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல் செல்போன்களில் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

The post மலர் கண்காட்சி கலை நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த திபெத்திய மக்களின் நடனம் appeared first on Dinakaran.

Read Entire Article