‘‘பணியாளராக இருந்து முக்கிய பொறுப்புக்கு வந்தவர் மட்டும் இல்லாம ஆளாளுக்கு உயர் அதிகாரியின் பெயரை சொல்லியே வசூல் வேட்டையில குதிச்சிட்டதா பேச்சு வருதே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாநகராட்சியில எதுக்கெடுத்தாலும் கமிஷன் தான் பேசுதுன்னு புகார்கள் எழுந்திருக்கு.. இந்த நிலையில பணியாளராக இருந்து இப்ப முக்கிய பொறுப்புக்கு வந்திருக்குறாராம் ஒருத்தரு.. இவருதான் இப்ப மாநகராட்சியோட பொறியாளர் டீம்ல முக்கியமானவராக திகழ்ந்து ஆட்டம் போட்டு வர்றாராம்.. இவரோட வசூல் வேட்டைக்கு எல்லையே இல்லையாம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட சென்னையில உயர் அதிகாரிங்களுக்கு கொடுக்கணும்னு கேட்டு, 20 எல் வரைக்கும் வசூல் செஞ்சிட்டாராம்.. இவரை போலவே இன்னும் சில பேரு கார்ப்பரேஷன்ல உயர் அதிகாரியின் பெயரை சொல்லியே ப விட்டமின்ல வேகமாக வளர்ந்து வர்றாங்களாம்..
இந்த வசூலை சமாளிக்க முடியாதவங்க என்ன செய்றது, யார்கிட்ட சொல்றதுன்னு திக்குதிசை தெரியாம தவிக்குறாங்களாம்.. இப்படியே போச்சுன்னா, எல்லா வேலைக்கும் ஆளாளுக்கு வசூல் வேட்டைய நடத்திடுவாங்கன்னு புலம்பல் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்குது.. இதனால இது யாரு என்னன்னு விசாரிச்சு ஆரம்பத்துலயே கிள்ளி எறியணும். விஜிலென்சும் கண்காணிச்சு நடவடிக்கைய எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்ச அதிகாரிங்களே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியின் மணியான மாஜி அமைச்சர் தமிழ்க் கடவுள் குடிகொண்டுள்ள ஊரில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதுதான் தென் மாவட்டம் முழுவதும் ஒரே பரபரப்பாகி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘முத்து மாவட்டத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்காக இலை கட்சியின் மணியான மாஜி அமைச்சர் நேரடியாக செந்தூர் சென்றாராம்.. அங்கு இரவு தங்கி விட்டு தன்னுடன் யாரையும் சேர்த்துக் கொள்ளாமல், அதிகாலையில் தமிழ்க் கடவுள் ஸ்தலத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாராம்.. இலை கட்சி ஏற்கனவே தேசிய கட்சியை ஒதுக்கி விட்டு, தேனிக்காரரை கைகழுவி விட்டு கடந்த மக்களவை தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் தோல்வி தான் மிச்சம். சேலம்காரரை மண்ணை கவ்வ வைத்து விட்டதில் தேனிக்காரர் அணியினர்தான் மகிழ்ச்சி அடைந்தாங்க.. இதனால் மக்களவை தேர்தலுக்கு பின்னர் தேனிக்காரரை இலை கட்சியில் சேர்க்க அந்த கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சேலம்காரரின் பிடிவாதம் தளரவில்லை. இதனால் இலை கட்சியின் நிலைமை அதோ கதி தான் என்றாகி விட்டது. மலராத தேசிய கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்தாலும் அவர்களது பிடிக்கு சேலம்காரர் தொடர்ந்து மறுத்து வருகிறார். அந்த கட்சி, மணியானவருடன் ரகசிய பேச்சுவார்த்தையிலும் இருக்கிறது. இந்நிலையில் தான் மணியான மாஜி யாகம் நடத்தியிருக்காரு.. இந்த யாகம் எதற்காக.. என இலை கட்சியினர் கூட்டம் போடாத குறையாக தென் மாவட்டங்களில் விவாதித்து வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போலி ஆவண பதிவு குறித்து சிபிஐ விசாரணையில் குதித்ததால் அச்சத்தில் இருக்கிறாராமே தொழிலதிபர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி கிராம பகுதியில் அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நபர் சொந்தமாகவும் தொழில் செய்கிறார். இவர், அளவுக்கு மீறி சொத்து குவித்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ அவரது வீடு மற்றும் உறவுகளின் வீடுகளில் புகுந்து சோதனை நடத்தியது.. பின்னர் தொழிலதிபரானவர் பணிபுரியும் அலுவலகத்திலும் சிபிஐ நுழைந்தது. அங்குள்ள கணினி உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்ததில் சில துப்புகள் கிடைக்கவே, அடுத்தகட்ட விசாரணைக்கு காய் நகர்த்தியது. இதனால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.. தங்களது வீடுகளுக்கும் சிபிஐ எந்த நேரத்திலும் வரலாம் என்ற அச்சத்தில் உலாவுகிறதாம் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த தரப்புகள்.. ஏற்கனவே அதே பகுதியில் பத்திர பதிவிலும் மோசடிகள் ஜரூராக நடப்பதாக புகார் சென்றுள்ள நிலையில் போலி ஆவணங்கள் பதிவு குறித்தும் ரகசிய விசாரணையில் சிபிஐ இறங்கியிருப்பதுதான் தற்போதை ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூசாரி தற்கொலை வழக்கில் வரப்போற தீர்ப்பு மூலம் தனது அரசியல் வாழ்வுக்கு பங்கம் வந்துவிடுமோ என கலக்கத்தில் இருக்கிறாராமே பலாப்பழக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தில் பிக்பாண்ட் நகர் அருகே பிரபல கோயில் இருக்குது.. இங்குள்ள பூசாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பலாப்பழக்காரரின் மன்னர் பெயர் கொண்ட சகோதரர் உள்பட சிலர் காரணம்னு பூசாரி தரப்பு அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தாங்க… இந்த வழக்கு விசாரணை தற்போது பூட்டு நகர நீதிமன்றத்தில் நடந்துக்கிட்டு இருக்கு.. இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் வாய்ப்புள்ளதாக சொல்றாங்க.. இதில் தனது சகோதரருக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற பதற்றத்தில் பலாப்பழக்காரர் இருக்கிறாராம்.. காரணம், ஏற்கனவே இலைக்கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், நடந்து முடிந்த எம்பி தேர்தலிலும் தோல்வியை தழுவிட்டார். தாமரை கட்சிக்கு செல்வதாக தகவல் பரவிய நிலையில், அங்கிருந்து முழுமையான கிரீன் சிக்னல் இதுவரை கிடைத்தபாடில்லை. இந்த சூழலில் தீர்ப்பும் சகோதரருக்கு எதிராக வந்தால், தனது அரசியல் வாழ்வுக்கு பங்கம் வந்துவிடுமே என அஞ்சுகிறாராம்.. இதனால் டெல்லி சென்று தாமரை கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுர்களை சந்தித்து வந்திருக்கிறாராம்.. மேலும், கோயில் கோயிலாக வேண்டுதல் வைத்து வருகிறாராம்… சமீபத்தில் கூட இது விஷயமாக புயல் கரை ஒதுங்கிய மாநிலத்தில் உள்ள பிரபல மரியாதைக்குரிய கோயிலுக்கு சென்று வந்ததாக ஹனிபீ மாவட்டத்தில் பரபரப்பாக பேசிக்கிறாங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post மலராத கட்சியுடன் தொடர்பில் இருக்கும் மாஜி அமைச்சரின் ரகசிய யாகம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.