சிறப்பு செய்தி
வளரும் நாடான இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச புள்ளிவிபரங்கள் மற்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. கொலை வழக்குகளில் 3.2சதவீதம், கொள்ளை வழக்குகளில் 4.8சதவீதம், வழிப்பறி வழக்குகளில் 5.6 சதவீதம், பாலியல் வழக்குகளில் 2.1 சதவீதம் பேர், சிறார் குற்றவாளிகளாகவே சிக்கி வருகின்றனர் என்பது நடப்பாண்டிலும் தொடரும் நிலவரம். இதேபோல் உள்ளூரில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையிலும் 5.3 சதவீதம் பேர் சிக்கி வருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதேபோல் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரங்களும் தொடர்ந்து சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளது. மேலும் இது குறித்த பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வறுமையால் சிறார் குற்றவாளிகள் அதிகம் உருவாகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சிறார் குற்றங்களில் ஈடுபடுவோரில் 96 சதவீதம் பேர் அத்தகைய நிலையில் இல்லை. குற்றவழக்குளில் சிறார் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறார் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தான் வசித்து வருகின்றனர். ஒரு சிலர் நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் ஒரு முறை குற்றவழக்கில் சிக்கியவரே தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வரும் நிலையும் உள்ளது.
மிக முக்கியமாக ஒருவரது குடும்பசூழல், வசிப்பிடம், சகாக்களின் தொடர்பு போன்றவை சிறார் குற்றவாளிகள் அதிகம் உருவாவதற்கு வழிவகுத்துக் கொடுக்கிறது. குறிப்பாக இதேபோல் சிறார் குற்றவாளிகள் உருவாவதற்கு இன்றைய இணையதள வளர்ச்சியும் மிக முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி தகவலும் ெவளியாகி உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவனது நடவடிக்கையில் மாற்றங்கள், அவனது நடை, உடை பாவனையில் மாற்றங்கள், புதிய வண்டி வாகனங்களை உபயோகித்தல் போன்ற நடவடிக்கைளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது அவர் ஏதாவது ஒரு குற்றச்செயலுக்கு துணையாக இருப்பதாலோ அல்லது அதை நிகழ்த்துவோரிடம் தொடர்பில் இருப்பதாலே வந்துள்ளது என்று சந்தேகப்படுவதும், அதற்காக தொடர்ந்து கண்காணிப்பதும் மிகவும் அவசியம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இது குறித்து இளம்சிறார் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:இளையதலைமுறையாக இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நம்நாட்டின் வருங்காலத்தூண்கள் தான். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கி சீர்படுத்துவது பெற்றோரின் கடமை மட்டுமல்ல. சமூக உணர்வு கொண்ட அனைவருக்கும் அவசியமானது. ஆனால் இன்றைய நவீன வளர்ச்சியும், நாகரீகத்தின் சுழற்சியும் இளைஞர்களையும், சிறுவர்களையும் வேறுபாதைக்கும் கொண்டு போய்விடுகிறது. வரம்பு மீறிய வசதிகள் இல்லாத நடுத்தர குடும்பத்து குழந்தைகளின் எண்ணஓட்டம் இதில் சிக்கும் போது அவர்களின் வழித்தடம் மாறுகிறது.
சமீபகாலமாக தங்கள் பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் உள்ளூர் விஷமிகளும், குற்றவழக்குகளில் சிக்கிய ரவுடிகளும் சிறார் குற்றவாளிகளை வளர்த்ெதடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய கொள்ளை, கொலை சம்பவங்களில் கடந்த சில ஆண்டுகளாக சிறார் குற்றவாளிகளின் பங்களிப்பும் அதிகமாக இருப்பதே இதற்கான சாட்சி. இதற்காக அவர்களுக்கு பணத்தாசை காட்டியும், ேபாதையை ஊட்டியும் வலைவிரித்து வருகின்றனர். ஏதாவது பிரச்னை என்றால் தாங்கள் துணையாக இருப்பதாகவும் மூளைச்சலவை செய்து தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றனர்.
எனவே அந்தந்த பகுதி போலீசார், சமூகவிரோதிகளையும், பழைய குற்றவாளிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் சிறார்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மிக முக்கியமாக சீர்திருத்த பள்ளியில் இருந்து வீடு திரும்பும் சிறார்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் மிகவும் அவசியம். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
நாகரீக மோகமே முதல் தொடக்கம்
நாகரீகம் என்ற பெயரில் மதுபழக்கம், போதைபொருட்களின் பழக்கம் மாணவப்பருவத்தினரிடம் அதிகரித்து வருகிறது. அதேபோல் பணிச்சுமையாலும், பரபரப்பான வாழ்க்ைகச் சூழலிலும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் தவறி விடுகின்றனர். விலைஉயர்ந்த பொருட்கள் மீது நாட்டம் கொள்ளும் சிறுவர்கள் சிலர், அதை வாங்குவதற்கு எந்த அளவிலும் இறங்கிச் செல்வதற்கு தயாராக உள்ளனர். அதேபோல் ஆசிரியர்கள் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்ட அக்கரையையும் தற்போது எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சில கண்டிப்புகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பி தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது. இதுபோன்ற பல்வேறு சமூக சூழல்கள், சிறார் குற்றவாளிகள் அதிகளவில் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15 சதவீத சிறார்களுக்கு ேபாதைப்பழக்கம்
இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18வயதுக்கு உட்பட்டோர் 33சதவீதம் என்ற அளவில் உள்ளனர். தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இதில் 6முதல் 7சதவீதம் பேர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆண்கள் 80சதவீதம், பெண்கள் 20சதவீதம் என்ற ரீதியில் குற்றச்செயல்களில் அவர்களின் நாட்டம் உள்ளது. சிறார் குற்றப்பதிவுகளில் மத்தியபிரதேசம், மேற்குவங்கம், பீகாருக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 15சதவீதம் இளம் வயதினரிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது. 18வயதுக்கு உட்பட்டவர்களில் 50சதவீதம் பேர், ஒரு முறையாவது போதைப்பொருளை பயன்படுத்தி உள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
குடும்பங்களும் வழி வகுக்கிறது
ஒரு குழந்தை தனது அதிகபட்ச நேரத்தை செலவிடும் முதல் இடம் குடும்பம். இது உறவுகளுடன் இணைந்திருக்கும் இடமாகவும் உள்ளது. குழந்தைகளை பொறுத்தவரை தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்து தான் சில நடத்தைகளை பழகிக்கொள்கின்றனர். குடும்பத்தில் தொடர்ச்சியான சண்டைகள் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கும். இது பலநேரங்களில் சிறுவர்களின் குற்றவியல் நடத்தைகளுக்கு வழிவகுக்கிறது. தலைமுறை இடைவெளிகளாலும் சில குழந்தைகள், குடும்பத்திலிருந்து தங்களை பிரித்துக் கொள்கிறார்கள். இந்த சூழலும் அவர்களை சில நேரங்களில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த காரணமாகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தமிழகத்தில் 8.3 சதவீத குற்றங்கள்
தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றங்களில் சேர்க்கப்படும் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் 2016ல் 3சதவீதமாக இருந்த சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 2017ல் 3.5சதவீதம், 2018ல் 4.8சதவீதம், 2019ல் 5.3சதவீதம், 2020ல் 5.9சதவீதம், 2021ல் 6.1சதவீதம் என்று அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டில் 6.8சதவீதம் என்றும், 2023ம் ஆண்டில் 7.1சதவீதம் என்று இது இருந்தது. கடந்தாண்டில் (2024) இது 8.3சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. புரிதல் இல்லாமை, குறைந்த புத்திசாலித்தனம், குழந்தை தொழிலாளராக மாற்றுதல், அதிர்ச்சிகரமான அனுபவங்கள், கல்வியறிவு இல்லாமை, போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, மனஅழுத்தம் போன்றவையும் சிறார் குற்றச்செயல்களுக்கு வழிவகுத்து கொடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
The post இந்தியாவில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்: பலிகடாவாக்கும் சமூக விரோதிகள்; நடவடிக்கை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம் appeared first on Dinakaran.