மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் அறிக்கை ‘மாஸ்டர் கிளாஸ்’: நிதி கமிஷன் தலைவர் பாராட்டு

1 month ago 4

சென்னை: நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கையை, மாஸ்டர் கிளாஸ் என்று கூறுவேன். ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் அனைத்தையும் ஒருங்கிணைத்து அளிக்கப்பட்டுள்ளது என நிதி ஆணையக்குழுவின் தலைவர் அரவிந்த பனகாரியா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் பனகாரியா கூறியதாவது: நிதிக்குழு ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்காக நியமிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த 16வது நிதிக்குழு பணிகளை தொடங்கியது. இந்த குழு 10வது மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு சமமாக வழங்க வேண்டும். மேலும் பேரிடர்களுக்கான நிதி மற்றும் சில மாநிலங்களுக்கு சிறப்பு நிதியும் வழங்கப்படுகிறது. நிதிகுழு ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து மாநிலங்களுக்கு சென்று பணியை தொடர்ந்து வருகிறது. அனைத்து மாநிலங்களுடன் 7 மாதங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதன்படி தற்போது தமிழகத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 18 மாநிலங்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையில் பங்கேற்று மாநிலத்தின் வளர்ச்சிக்கான தனது நீண்ட கருத்துகளை தெரிவித்தார். தற்போது ஒன்றிய அரசின் வரி பகிர்வில் மாநிலத்திற்கு 41 சதவீதமாக உள்ளது. இதனை 50% அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மற்ற மாநிலங்களும் இந்த விகிதத்தை அதிகரிக்க கோரிக்கை வைக்கின்றனர். பொதுவாக மற்ற மாநிலங்களில் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வழங்கப்படும். ஆனால் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதி கோரிக்கைக்கான விளக்கங்கள், எதற்கு தேவைப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளனர். இதுவரை நிதிக்குழு ஆணையம் இந்தியாவில் 12 மாநிலங்களுக்கு சென்றுள்ளது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் ஏன் நிதியை அதிகரிக்க வேண்டும் என தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆழ்ந்த ஆராய்ச்சி, தெளிவான பகுப்பாய்வுடன் கூடிய தமிழக அரசு தரப்பில் தலைச்சிறந்த தரவுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வளர்ச்சியை எதிர்நோக்கும் மாநிலத்திற்கும், வளர்ச்சியடைந்த மாநிலத்திற்குமான நிதிப் பகிர்வு இடைவெளி அதிகரித்து உள்ளது. வளர்ச்சி எதிர்நோக்கும் மாநிலத்திற்கு 3, வளர்ச்சி அடைந்த மாநிலத்திற்கு 1 என 3:1 ஆக இருந்த இடைவெளி தற்போது 6:1 ஆக அதிகரித்துள்ளது. 15வது நிதிக்குழு 2011 மக்கள் தொகை கணக்கீடு படியான நிதிப் பகிர்வு முறையை பரிந்துரைத்ததை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியாவின் மொத்த ஜிடிபி (GDP) 8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே அளவிலான நிதிப் பகிர்வை தமிழ்நாடு எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 5 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும் போன்ற பல பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது. தனிநபர் ஆண்டு வருமானத்தை சாதாரணமாக புரிந்து கொள்ள கூடாது. பீகாரில் உருளைக்கிழங்கு விலையும் தமிழ்நாட்டில் அதன் விலையும் ஒன்றாக இல்லை. வாங்கும் திறனில் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளித்திருந்தனர்.

இதுவரை 10 மாநிலங்களில் ஆலோசனை மேற்கொண்டத்தில் தமிழ்நாடுதான் தனிநபர் ஆண்டு வருமானம் மற்றும் வாங்கும் திறனை குறிப்பிட்டு பரிந்துரைகளை கோரியது. வேறு மாநிலங்களும் இதேபோன்ற கோரிக்கையை வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நிதிப் பகிர்வு உயர்த்துவது குறித்து அனைத்து மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின்னர் தான் இந்தக் குழுவால் எந்த முடிவையும் எடுக்க முடியும். ஒன்றிய அரசின் திட்டங்களை மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்புடன் நிறைவேற்றுவதில், ஒன்றிய அரசின் பங்கை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசு தான் முடிவெடுக்கும். தமிழ்நாடு மக்கள்தொகை, சராசரி வயது அதிகரிப்பு மற்றும் பேரிடர் நிதி உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள் வைப்பது மாநில அரசின் உரிமை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் மீட்பு, மறுகட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளில் தமிழ்நாடு ஒரு கருத்தை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் அறிக்கை ‘மாஸ்டர் கிளாஸ்’: நிதி கமிஷன் தலைவர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article