சென்னை,
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து மறைந்த இரண்டு வணிகர்களின் குடும்பத்தினர்களுக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3,00,000-க்கான காசோலைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் இன்று (21.01.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மறைந்த இரண்டு வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டியைச் சார்ந்த ரா.பவானி மற்றும் சேலத்தை சார்ந்த மே.உஷா ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பாக குடும்ப நல நிதி உதவித் தொகை தலா ரூ.3,00,000- க்கான காசோலைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மேலும் அனைத்து இணை ஆணையர்களும் தங்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதை உறுதி செய்தல், உள்ளீட்டு வரி வரவு (ITC) மனுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தவறுகள் ஏதும் நடக்காமல் கண்காணித்தல், சரக்கு போக்குவரத்து வாகனங்களை சோதனை செய்து E-Way Bill உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுத்தல், அரசுத் துறைகள் GSTR-7 படிவங்கள் தாக்கல் செய்வதை உறுதி செய்தல், போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு அரசுக்கு வரி வருவாய் ஈட்டித்தர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.