ஹோபர்ட்,
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மற்ற 4 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஹோபர்ட் தரப்பில் அதிகப்டசமாக பென் மெக்டெர்மார்ட் 42 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ஹோபர்ட் அணி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் ஜோர்டான் சில்க் 57 ரன் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட சிட்னி சிக்சர்ஸ் அணி 2வது தகுதி சுற்றுக்கு (சேலஞ்சர் ஆட்டம்) முன்னேறியது. சிட்னி தண்டர் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன், 2வது தகுதி சுற்றில் சிட்னி சிக்சர்ஸ் அணி மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.