மறைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு விரைவில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

3 hours ago 2

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: முன்னாள் படைவீரர்கள் பெரும்பாலும் அவர்தம் இளம் வயதிலேயே படைப்பணியிலிருந்து விலகுவதால், அவர்களுக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் அடிப்படையில், 249 முன்னாள் படை வீரர்கள் அரசு வேலைவாய்ப்பில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், இங்கே முன்னாள் அமைச்சர் கே.சிகருப்பணன் பேசும்போது, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதைப் பற்றி குறிப்பிட்டார்கள். அது விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் விரைவில் அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த அரசின் மற்றுமொரு புதிய முன்னெடுப்பான “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரையிலான வங்கி கடன்களுக்கு, 30 சதவீதம் மூலதன மானியமாகவும், 3 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கிட 17-12-2024-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினருக்கு 400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ ரூ.120 கோடி முதலீட்டு மானியம் மற்றும் 3% வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களிடமிருந்து 2,111 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 425 விண்ணப்பங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* புற்றுநோய் சிகிச்சையில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.10,000 பேரவையில் அமைச்சர் கயல்விழி வெளியிட்ட அறிவிப்புகள்:

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் ஈமச்சடங்கிற்காக வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.7000 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

The post மறைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு விரைவில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article