மறுமலர்ச்சி காணும் ஏலக்காய் சாகுபடி!

3 hours ago 3

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள தாண்டிக்குடி பகுதி விவசாயிகள் நல்லானி ரக ஏலக்காயைப் பயிர் செய்வது குறித்தும், அதன் சாகுபடி விவரங்கள் குறித்தும் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில் தாண்டிக்குடியைச் சேர்ந்த கரியமங்களம் என்ற ஏலக்காய் விவசாயியின் சாகுபடி அனுபவம் குறித்து காண்போம். தனது ஏலத்தோட்டத்தில் பராமரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த கரியமங்களத்தைச் சந்தித்தபோது, தனது பணிகளின் இடையே நம்மிடம் பேசினார். “கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இந்த மலைப்பகுதி முழுவதும் ஏலக்காய் விவசாயம் பெரிய அளவில் நடந்தது. காலப்போக்கில் வந்த ஒரு வைரஸ் நோயால் ஏலக்காய் விவசாயம் மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்றது. இங்கிருந்த விவசாயிகள் காப்பி, வாழை, அவரை, சௌசௌ, பீன்ஸ் போன்ற மாற்றுப் பயிரை நாடினர். கடந்த சில வருடங்களாக நல்ல பருவமழையும், தோதான சீதோஷ்ண நிலையும் நிலவுவதால் நாங்கள் தற்போது ஏலக்காய் விவசாயத்திற்கு திரும்பி விட்டோம். ஏலக்காய் ஒரு நல்ல பணப்பயிர் என்பதே இதற்கு காரணம். மேலும் தற்போது கீழ் மலை என்று சொல்லக்கூடிய தாண்டிக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான விவசாயிகள் நல்லானி என்ற ஏலக்காய் ரகத்தை தற்போது நடவு செய்திருக்கிறார். அதிகம் நோய் தாக்காது, குறுகிய காலத்தில் அதாவது மூன்று வருடத்தில் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும் என்பது இந்த ரகத்தின் சிறப்பு அம்சம். தொடர்ந்து 15 வருடங்களுக்கு மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும். பராமரிப்பு வேலைகள் எளிது. அதிக அளவில் மருந்து உரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கை உரங்களை வைத்தாலே போதும். இதுபோன்ற கூடுதல் அம்சங்களே நல்லானி ரகத்தை விவசாயிகள் நாட முக்கியக் காரணம்.

ஏலச்செடியைப் பொறுத்தவரை தூர்ப்பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தோட்டத்தில் முளைக்கும் களைகளை அடிக்கடி அகற்ற வேண்டும். வறண்ட காலங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். ஏலச் செடிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு போடுவது நல்லது. தற்போது எங்கள் தோட்டத்தில் 5 ஏக்கர் வரை நல்லானி ரகத்தை நடவு செய்திருக்கிறோம். இங்குள்ள செடிகளை நட்டு இரண்டு வருடம் முடிந்து தற்போது மூன்றாவது வருடம் தொடங்குகிறது. இந்தத் தோட்டத்தில் தற்போது நல்ல முறையில் பூ பூத்து காய்கள் பிடித்திருக்கிறது. நாங்கள் இயற்கை முறையில் வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, கடலைப் புண்ணாக்கு 10 கிலோ, மண்டை வெல்லம் 2 கிலோ, தயிர் ஒரு லிட்டர், மாட்டுச்சாணம் 10 கிலோ என்ற அளவில் எடுத்து 200 லிட்டர் தண்ணீர் உள்ள ஒரு ட்ரம்மில் போட்டு கலக்கி அதை நன்கு புளிக்க வைப்போம். அதில் இருந்து தெளிந்த நீராக வடிகட்டி ஒரு செடிக்கு 5 லிட்டர் வீதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏலச்செடிகளின் தூர்ப்பகுதியில் ஊற்றுவோம். இதனால் எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, ஏலச்செடிகள் நன்கு வளர்ந்து செழிப்பாக உள்ளன. சில ஏலச்செடிகளில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு காய்கள் பிடித்திருக்கின்றன. நாங்கள் சரியான அளவில் இயற்கை உரங்களை, இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, முறையான அளவில் நீர் பாய்ச்சி வருகிறோம். நிழல் மரங்களை 60 சதவீதம் வரை பராமரிக்கிறோம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 200 கிலோ முதல் 350 கிலோ வரை ஏலக்காய் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது நன்றாக விளைந்த ஒரு கிலோ ஏலக்காய்க்கு ரூ.2800 முதல் 3000 வரை விலை கிடைக்கிறது. இந்த விலை சர்வதேச சந்தை விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நம் நாட்டில் மாறுபடுகிறது. இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு மற்றும் கூடுதல் கவனம் செலுத்துவதால் எங்களுக்கு ஏக்கருக்கு கூடுதலாக 500 கிலோ வரை மகசூல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது கீழ்மலைப் பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 1600 ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதலாக நிலப்பரப்பில் ஏலக்காய் விவசாயம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார்.

The post மறுமலர்ச்சி காணும் ஏலக்காய் சாகுபடி! appeared first on Dinakaran.

Read Entire Article