
தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டி புதூரில் 140 ஆண்டு பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலத்தின் 140-வது ஆண்டு திருவிழா கடந்த 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நவநாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு தினமும் மாலை 7 மணிக்கு புனித சலேத் மாதா திரு உருவம் தாங்கிய கொடி மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள லா சலேத் திருத்தல பேராலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித சலேத் மாதா சொரூபம் தாங்கிய சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ம் தேதி புதன்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது. கிழக்கு மாரம்பாடி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் குஜராத் சேசு சபை அருட்தந்தை பேட்டரிக் ஆகியோர் கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சலேத் மாதா சொரூபம் வைக்கப்பட்ட மின் தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதன்பின் புனித சலேத் மாதா திரு உருவம் தாங்கிய கொடி புனிதப்படுத்தப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை பகல் திருவிழாவில் மதியம் 2 மணிக்கு புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்கள் எழுந்தருளிய பெரிய தேர் பவனி நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 5 மணிக்கு முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமான ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் புனித சலேத் மாதாவின் சப்பரத்தை சுற்றி வந்து வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெற்றது.