சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், விதி எண் 55ன் கீழ், “அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இளநிலை படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை” குறித்து விவாதம் நடந்தது. அது வருமாறு: திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அது நிலைத்து நிற்க அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுத்தவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்பதுதான் முழுமையான உண்மை. எனது தொகுதியில் உள்ள இரண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 7.5 சதவீத கோட்டாவில் வந்த மாணவர்களிடம் அதிக கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.
விராலிமலை சி.விஜயபாஸ்கர் (அதிமுக): 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத வகையில் ஆளுநர் கையெழுத்திடாமல் இந்த திட்டத்தை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதற்கு கட்டணங்கள் வசூலிக்கின்றன. இது சம்பந்தமாக என்னிடம் ஆதாரத்துடன் புகார் உள்ளது.
வேல்முருகன் (தவாக): இந்த 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வாகும் மாணவர்கள் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேரும்போது, பல சுயநிதி கல்லூரிகள் இந்த கட்டண சலுகையை ஏற்றுக் கொள்ளவில்லை. திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர்களை நான் தற்போதைய முதல்வரிடம் அழைத்துச் சென்றேன். அவர் அறிவுரைப்படி சட்ட வல்லுநர் வில்சனிடம் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு மாணவர்களை சேர்த்தேன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் கடந்த ஆட்சியில் 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இளநிலை படிப்பில் சேர்க்க சட்டம் கொண்டு வந்தார்கள். சட்டம் கொண்டு வந்தாலும் அதை ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருந்தார். இதற்காக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளித்தார். ஆளுநருக்கு எதிராக, அவரது தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் ராஜ்பவன் முன்பு நடத்தினார். அந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திமுகவே கட்டும் என காலையில் அறிவித்தார். அதன்பின் மாலையில் அரசே மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை கட்டும் என இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தார். 7.5 சதவீதத்தை நீங்கள் கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்ற மூல காரணமாக இருந்தவர் தற்போதைய முதல்வர் என்பதை நாடு அறியும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால் மனக் கொதிப்பில் இருந்த மாணவர்களை அமைதிப்படுத்த நீங்கள் 7.5% ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்தீர்கள். (இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் எழுந்து நின்றனர்)
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: 7.5% கொண்டு வரும்போது உடனடியாக அட்மிஷன் போட வேண்டும் என்று அரசு எதிர்பார்த்தபோது, ஆளுநர் இடத்தில் இருந்து ஒப்புதல் வரவில்லை. ஒப்புதல் அளிக்காத காரணத்தால் இந்தியாவிலேயே யாரும் செய்யாத அளவில் அரசியல் அமைப்பு சட்டம் 164ன் படி அதை சட்டமாக்கியது அப்போதைய அதிமுக அரசு.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அந்த சட்டம் நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுத்தவர், இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். (அமைச்சரின் பேச்சுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். குறிப்பாக பின்வரிசையில் இருந்த கே.பி.முனுசாமி, தளவாய்சுந்தரம் ஆகியோர் சத்தமாக குரல் கொடுத்தனர். சபாநாயகர் அப்பாவு அவர்களை எச்சரிக்கை செய்து, கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றார். உங்கள் துணைத் தலைவருக்கு நான் பேச வாய்ப்பு கொடுக்கிறேன். அவர் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா என பேசினார். ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்றனர்.)
அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சி துணைத்தலைவரிடம் தாங்கள் அரசாணை கேட்டீர்கள். அதை அவர் படித்து காட்டினார். அதன்பின் என்ன வேண்டும். அதை பதிவு செய்ததாக நீங்களும் கூறி விட்டீர்கள். அதோடு, பிரச்னை முடிந்தது.
ஆர்.பி.உதயகுமார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தவறான தகவல்களை கூறியுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு: மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர், இந்த சட்ட மசோதா நிறைவேற்றிய வரலாற்றை கூறியுள்ளார். பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதை கூறியுள்ளார். நீங்கள் பேசியதும் உள்ளது, அவர் பேசியதும் உள்ளது. இதை அவை குறிப்பிலிருந்து நீக்க எந்த அவசியமில்லை.இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக உட்கார்ந்தனர்.
* 1,842 புதிய வழித்தடங்களில் மே 2ம் வாரத்தில் புதிய மினி பேருந்து திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: திட்ட வரைவு வெளியிடப்பட்டு, மினி பேருந்து திட்டம் 2024ல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கான அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, 1,842 பேர் புதிதாக மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பித்தார்கள்; அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 2,053 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த 1,842 புதிய வழித்தடங்களில் முதற்கட்டமாக முதல்வர் மே மாதம் இரண்டாம் வாரத்தில் கொடியசைத்து அந்த மினி பேருந்து புதிய திட்டத்தையும் தொடங்கவிருக்கிறார்.
* சித்திரை திருவிழா கள்ளழகர் பச்சை உடையணிந்து மிக அழகாக மே 12ம் தேதி ஆற்றில் இறங்குவார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் போது மாநகராட்சிக்கு கோயில் செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்படவில்லை என்றால் மாநகராட்சி சித்திரை திருவிழாவிற்கு அனுமதி வழங்காது என்று தெரிவித்துள்ளது’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘2013-2014ம் நிதியாண்டு முதல் 2017-2018ம் நிதியாண்டு வரையில் மாநில கணக்காய்வு குழுவின் அறிக்கையின்படி 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் நிலுவையில் இருக்கிறது. அந்த நிலுவைத் தொகையை மதுரை மீனாட்சி அம்மன், அழகர்கோவில் கோயில் ஆகிய இரு திருக்கோயில்கள் சார்பில் நேற்று கட்டி இருக்கிறோம். இதுபோன்று திருவிழாக்கள் நடக்கின்ற மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற தீபத் திருவிழாவின் போது துப்புரவுப்பணிகள், சுகாதாரம், கூடுதலாக செலவாகின்ற மின்சாரப் பணிகளுக்கு ரூ.1.50 கோடி அளவிற்கு திருக்கோயிலில் இருந்து தான் தந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில், முதல்வர் கவனத்திற்கு வந்தவுடன் இந்த பிரச்சனைக்கும் நேற்றைய தினமே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. சித்திரை திருவிழா கள்ளழகர் பச்சை உடையணிந்து மிக அழகாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியோடு 12ம் தேதி ஆற்றில் இறங்குவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
* ஓட்டுநர், நடத்துனர் பணிகள் தனித்தனியாகவே எடுக்கப்படும்: அமைச்சர் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: புதிய பேருந்துகளை வாங்குகின்ற இந்த நேரத்தில், புதிய பணியாளர்களைப் பணிக்கு எடுக்க வேண்டுமென்று, அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 பேர் கடந்த ஆண்டே பணிக்கு எடுக்கப்பட்டுவிட்டார்கள். அதேபோன்று, மற்ற 7 போக்குவரத்துக் கழகங்களுக்கும் 3,275 நபர்களை பணிக்கு எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி முடிந்தது.
அந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை எடுக்கின்ற நேரத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துனராக எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த முறையை மாற்ற வேண்டுமென்று உறுப்பினர் சந்திரன் கோரிக்கை வைத்தார். ஆனால் ஓட்டுநர் தனியாக, நடத்துநர் தனியாக என்று எடுக்கின்ற சூழலில், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடீரென்று பணிக்கு வராமல் போய்விட்டால் ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. 5 ஓட்டுநர்கள் வராவிட்டால், 5 பேருந்துகளை இயக்க முடியாத நிலையும், 5 நடத்துநர்களுக்கு பணி கொடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், இந்த முறை மட்டும், ஒரு மாற்று ஏற்பாடாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என்ற முறையில் எடுக்கப்படுகிறது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்த முறையில்தான் பணிக்கு எடுக்கப்படுகிறார்கள். இப்பொழுது மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கும் அவ்வாறு எடுக்கின்ற காரணம், 5 ஓட்டுநர்கள் வராவிட்டால், ஓட்டுநர்-நடத்துநராக பணிக்கு எடுக்கப்படும். அந்த இடங்களில் ஓட்டுநராகப் பணியாற்றுவார்கள், நடத்துநர் வராவிட்டால், அவர்களுக்கு நடத்துநருக்கான பணியை மாற்றிக் கொடுத்து, பணியாற்றுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றபோது, மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அனைத்துப் பேருந்துகளையும் இயக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை, ஓட்டுநர்-நடத்துனர் பணிக்கு எடுக்கின்றபொழுது தனித்தனியாகவே எடுக்கப்படும்.
The post மருத்துவ படிப்பில் 7.5% மாணவர் சேர்க்கை விவகாரம் திமுக-அதிமுக கடும் வாக்குவாதம்: சபாநாயகர் எச்சரிக்கை appeared first on Dinakaran.