மருது பாண்டியர்களின் நினைவு நாளையொட்டி அக்.24ல் கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

3 weeks ago 5

சென்னை: மருது பாண்டியர்களின் நினைவு நாள் 24.10.2024 அன்று கிண்டி மருது பாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு அமைச்சர் பெருமக்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மருதுபாண்டியர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் 24.10.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சேர்வை-பொன்னாத்தாய் தம்பதியினரின் மகன்களாக 1748 ஆம் ஆண்டு பெரியமருதும், 1753-ஆம் ஆண்டு சின்னமருதும் பிறந்தார்கள். மருது சகோதரர்கள் படைத்தளப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றனர். அப்போது தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்த உறுதியான-ஆற்காடு நாணயத்தைத் தன் 6006 விரல்களினால் வளைக்கக்கூடிய வலிமை பெற்றவராக பெரியமருது இருந்தார். அந்தக் காலத்தில் வளரி என்ற ஆயுதம் சிறப்பு வாய்ந்தாக இருந்தது. இவ்வாயுதம் எதிரியைத் தாக்கி வீழ்த்தி வீட்டு மீண்டும் எறிந்த நபரிடமே திரும்பி வரும் ஆயுதம்.

அது மிகவும் பயங்கரமான வளரி ஆயுதத்தைத் திறமையாகப் பயன்படுத்தும் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்கள் மருதுசகோதரர்கள். தந்தை பழனியப்பன் சேர்வை இராமநாதபுரம் அரசவையில் பணி புரிந்தார். மருதுசகோதரர்கள் மன்னர் விஜயரகுநாதரின் மகளான ராணி வேலுநாச்சியாரின் நண்பர்கள் ஆனார்கள். ராணி வேலுநாச்சியார் சிவகங்கை இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதர் பெரிய உடைய தேவரை மணந்து சிவகங்கை வந்தபோது அவர்களுடன் வந்து அங்கேயே தங்கினர்.

26.5.1772-ல் ஆற்காடு நவாப்பிற்கு சிவகங்கை அரசினர் கப்பம்செலுத்தாத காரணத்தினால் சிவகங்கை மீது ஆங்கிலேயர்கள் போர்தொடுத்தனர். சிவகங்கையில் இருந்த நவாப்பின் படைகளும், கும்பனிபடைகளும் சேர்ந்து சிவகங்கை மன்னரைத் தாக்கின. இப்போரில் மன்னர் முத்துவடுகநாத தேவர் வீரமரணம் அடைந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு ராணி வேலுநாச்சியார். மருதுபாண்டியர்கள் மற்றும் ஹைதர்அலி திப்புசுல்தான் ஆகியோர் உதவியுடன் சிவகங்கை ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார்கள். ஆங்கிலேயர்கள் மருதுபாண்டியரைச் “சேர்வைக் காரர்கள்” என்று சிறப்புப் பட்டம் வழங்கி அழைத்தனர்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மருதுபாண்டியர்கள் தங்கள் படையைச் சேர்ந்த 500 வீரர்களை அனுப்பி உதவி செய்தார்கள். வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பிப் பிழைத்த வீரர்கள் காளையார் கோவிலில் காட்டில் மறைந்து வாழ்ந்தனர். இதனால், ஆங்கிலேயருடன் நேரடி போர் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. மேலும், பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய ஊமத்துரை சின்னமருதுவின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.

16.6.1801ஆம் ஆண்டு சின்னமருதுவால் ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு பதிவு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதன் அறிக்கையின் நகல்கள் திருச்சி. திருரங்கம் ஆகிய இடங்களில் காணப்பட்டன. அதில், தமிழக மக்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள சாதி, மத வேற்றுமையை மறந்து நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வெள்ளையரை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராட வேண்டும்; மரணத்திற்கு யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறப்பட்டிருந்து.ஆங்கிலேயருடன் நடைபெற்ற போரின் மருதுபாண்டியர்களைச் சிறைப்பிடிக்க ஆங்கிலேயரால் முடிவில் உத்தரவிடப் பட்டது.

19.10.1801-அன்று சோழபுரம் காட்டில் மருது சகோதரர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர், 24.10.1801 அன்று மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.முதலமைச்சர் மருது பாண்டியர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் மருது பாண்டியர்கள் திருவுருவச்சிலைகளைப் புதிதாக அமைத்து 14.2.2023 அன்று தம் திருக்கரங்களால் திறந்து வைத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று மருதுபாண்டியர்களின் நினைவுநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி நடைபெறும் இன்றைய நிகழ்ச்சியில், மேயர்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

 

The post மருது பாண்டியர்களின் நினைவு நாளையொட்டி அக்.24ல் கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article