மருதமலை குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் - அறநிலையத்துறை உறுதி

2 days ago 2

சென்னை,

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி சுரேஷ்பாபு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே போல், நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவன் தாக்கல் செய்த மனுவில், குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த 2 மனுக்களும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மருதமலை கோவில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மருதமலை கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், குடமுழுக்கு விழாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம், தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிப்பது குறித்து விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Read Entire Article