
ராய்காட்,
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் நகரில் ஆக்சி கடற்கரை பகுதியில் இருந்து 7 கடல் மைல்கள் தொலைவில் மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 3 முதல் 4 மணியளவில் அந்த படகு திடீரென தீப்பிடித்து கொண்டது.
இதனால், படகில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதுபற்றிய தகவல் தெரிந்ததும், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படகில் இருந்த 18 பேரும் மீட்கப்பட்டனர். இதனை ராய்காட் மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்தி உள்ளார்.
இதன்பின்னர், அவர்கள் அனைவரும் மற்றொரு மீன்பிடி படகில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தின்போது, அந்த வழியே சென்ற இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. இந்த மீன்பிடி கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது, அதனை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் பார்த்து உள்ளனர்.
உடனடியாக நிலைமையை உணர்ந்து, மீனவர்கள் அனைவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதில், 18 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.