
சென்னை,
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரதீப் ரங்கநாதனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் டிராகன் எனும் திரைப்படம் வெளியானது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் இப்படம் ரூ.100 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் லவ் டுடே படத்திற்கு பிறகு டிராகன் படத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு ஹீரோ என நிரூபித்து இருக்கிறார் பிரதீப். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை நடிகர் பிரதீப் ரங்கநாதன், எல்ஐகே படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'டிராகன்' பட வெற்றி தொடர்பாக ஒரு பதிவு ஒன்றையும் போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் அவர், "இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் தருணத்திற்காக நம்பிக்கையுடன் நாங்கள் கற்பனை செய்துக் கொண்டிருந்தோம். அதை தற்போது அனுபவத்திருக்கிறோம். பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு தகுதியானவர். அவர் அதிகமான உயரங்களுக்குச் செல்ல வேண்டும். பிளாக்பஸ்டர் திரைப்படமாக பல வசூல் சாதனை செய்துக் கொண்டிருக்கும் டிராகன் படத்தின் வெற்றியை 'எல்ஐகே' குழுவினர் கொண்டாடினோம். தேவையான மெசேஜ் சொல்லும் இத்திரைப்படம் மக்களின் பேவரிட்டாகியிருக்கிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் பயர் பெர்பாமென்ஸைக் கொடுத்திருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.