சென்னை ,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த சூழலில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், மராட்டியத்தில் பா.ஜ.க. வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .
கோவை பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இதில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.