
திருமலை,
திருமலை அருகே சிலோத்தோரணம் மலைப் பகுதி உள்ளது. அங்கு, பாறைகள் 'தோரண வாயில்' போன்ற வடிவில் இயற்கையாகவே உள்ளன. அங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சிலோத்தோரணம் மலைப்பாறையைப் பார்ப்பார்கள். அவ்வாறு நேற்று முன்தினம் மதியம் பக்தர்கள் சிலோத்தோரணம் மலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இரு பாறை இடுக்குகளில் ஒரு சிறுத்தை வந்து படுக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்தர்கள், திருமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை விரட்டியடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளன. இருப்பினும், கடந்த காலங்களில் சிலாத்தோரணம் மலைப்பகுதிக்கு சிறுத்தைகள் வந்துள்ளன. தற்போது மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலிபிரி நடைபாதையில் எந்த ஒரு பக்தரும் தனியாகச் செல்ல வேண்டாம், கும்பலாகச் செல்ல வேண்டும், என எச்சரிக்கை விடுத்தனர்.