மராட்டியம்: மராட்டியத்தில் பாஜக தலைமையிலான மகா யுத்தி கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் புதிய குழப்பம் நீடித்து வருகிறது. மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை என்ற நிலையில் மகா யுத்தி கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதை அடுத்து தற்போதைய துணை முதலமைச்சர் ஆன தேவேந்திர பட்னவீசை முதலமைச்சராக்க வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை சந்தித்து மிக பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் அவரையே முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று சிவசேனா தரப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால் முதலமைச்சர் பதவி குறித்து முடிவு எடுப்பதில் பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சர் ஆவதை எதிர்க்க மாட்டோம் என அஜித்பவரின் தேசிய வாத காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஷிண்டே தரப்புடன் பாஜக தலைமை நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எடுக்கப்படாததால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தற்போதைய மராட்டிய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவடைவதால் புதிய அரசு உடனடியாக பதவி ஏற்கவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஷிண்டேவை ஓரம்கட்டிவிட்டு பட்னவீசை முதலமைச்சராக்க பாஜக அறிவிக்குமா அல்லது ஷிண்டேவிற்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க பாஜக முன்வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post மராட்டியத்தின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்: தேவேந்திர பட்னாவிஸை முதலமைச்சராக்க பாஜக தீவிரம் appeared first on Dinakaran.