
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 54 வயது பள்ளி ஆசிரியருக்கு சமூக வலைதளம் மூலம் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், அதிக வருமானம் ஈட்டி தருவதாக ஆசை காட்டி ஒரு இணையதளத்தில் பணத்தை முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளார்.
இதனை நம்பிய அந்த ஆசிரியர், சுனிதா சவுத்ரி கூறிய இணையதளத்தில் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இதன்படி 50 நாட்களில் சுமார் ரூ.66 லட்சம் பணத்தை அவர் முதலீடு செய்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்தபடி சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்து வருமானம் எதுவும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர், சுனிதா சவுத்ரியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இது குறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட சுனிதா சவுத்ரி என்ற பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.