மரக்காணம், டிச. 2: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், தேவிகுளம், நடுக்குப்பம், கோட்டிகுப்பம், ஓமிப்பேர், அடசல், கீழ்ப்பாக்கம், ஞானக்கால் மேடு, அனுமந்தை, காளியாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மத்தியில் செல்கிறது பக்கிங்காம் கால்வாய். இந்த கால்வாய் மரக்காணம் அருகே கூனிமேட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதி வரை செல்கிறது.
இந்த பக்கிங்காம் கால்வாய் மரக்காணம் பகுதியில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய சதுப்பு நிலப்பகுதி ஆகும். இந்த கால்வாயில் சுற்றுப்புற பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளன. வண்டிப்பாளையம் மற்றும் ஆத்திக்குப்பம் கிராமங்களுக்கு இடையே இந்த கால்வாயில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாகத்தான் பல கிராம மக்கள் புதுவை, திண்டிவனம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மரக்காணத்திற்கும், புதுவை மாநிலத்திற்கும் இடையில் கரை கடந்த பெஞ்சல் புயலால் மரக்காணம் பகுதியில் சூறைக்காற்றுடன் அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்கிங்காம் கால்வாயில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இந்த வெள்ளத்தின் காரணமாக வண்டிப்பாளையம்-ஆத்திக்குப்பம் கிராமங்களுக்கு இடையே இருந்த தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கி விட்டது.
இந்த தரைப்பாலத்திற்கு மேல் சுமார் 5 அடி உயரத்திற்கு வெள்ள நீர் செல்கிறது. இந்த தரைப்பாலம் மூழ்கியதால் பக்கிங்காம் கால்வாயில் அருகில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு தான் மற்ற இடங்களுக்கு செல்கின்றனர். இந்த பகுதியில் வெள்ளம் குறைய குறைந்தது 4 மாதத்திற்கு மேல் ஆகும். வனத்துறை தடுப்பதால் இப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடியவில்லை. வண்டிப்பாளையம்-ஆத்திக்குப்பம் கிராமங்களுக்கு இடையே மேம்பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள், இந்த இடம் எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் தான் பறவைகள் சரணாலயமும் அமைக்க அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதனால் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில் மேம்பாலமோ சாலைகளோ அமைக்க கூடாது எனக் கூறி தடை செய்து விட்டனர்.எனவே வனத்துறையினரின் அனுமதி பெற்று இங்கு மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மரக்காணம் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.