மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம் முதல் முதலியார்குப்பம் வரையில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு அழகிய கடல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இயற்கையாக அமைந்த மணல் மேடுகளும் உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலம் என கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுபோல் இனப்பெருக்கத்திற்காக இந்த மாதங்களில் நூற்றுக்கணக்கான கடல் ஆமைகள் மரக்காணம் கடற்கரையோரமுள்ள மணல்மேட்டு பகுதிகளுக்கு முட்டையிட வருகின்றன.
இப்பகுதியில் கடல் ஆமைகள் இடும் முட்டைகளை வனவிலங்குகள் மற்றும் பொதுமக்கள் கூட எடுத்து அழித்து விடுகின்றனர். இதுபோல் ஆமைகளிடம் முட்டைகள் அழிக்கப்படுவதால் அதன் இனம் அழிந்து கடல் பகுதியில் பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இந்த அபூர்வ ஆமைகளை பாதுகாக்க பன்னாட்டு அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுபோல் மரக்காணம் பகுதியில் இந்த ஆமைகளை பாதுகாக்க ஜப்பான் நாடு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த நிதியின் மூலம் ஆமை முட்டைகளை பாதுகாக்க வனத்துறை சார்பில் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை ஓரம் ஆமை முட்டைகள் பாதுகாப்பு குடியல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகள் பல்வேறு காரணங்களால் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குகிறது. இதுபோல் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழி தோண்டி புதைக்காமல் மணல் பகுதியில் விட்டு விடுகின்றனர். இதனால் ஆமை இறந்து கிடக்கும் பகுதியில் துர்நாற்றம் வீசுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. நேற்று முன்தினம் ஒரு பெரிய ஆமை இறந்த நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை ஓரம் கரை ஒதுங்கி உள்ளது. இந்த ஆமையை வனத்துறையினர் எடுத்து குழிதோண்டி புதைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளை குழி தோண்டி புதைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மரக்காணம் அருகே கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் appeared first on Dinakaran.