
சென்னை,
மயோனைஸ் என்பது முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் சாஸ் ஆகும். வெள்ளை நிறத்திலான இந்த சாஸ் தான் ஷவர்மா, தந்தூரி, சான்ட்விச், சலாட், பார்பிகியூ உள்பட துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மயோனைசில் உள்ள சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயோனைஸ் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மாற்று உணவுப் பொருள் என்ன? என்று உணவுப் பிரியர்கள் யோசித்து வருகின்றனர். தற்போது, அதற்கு மாற்றாக மிராக்கிள் விப், கிரேக்க தயிர், அக்வா பாபா, புளிப்பு கிரீம், வெண்ணெய், தஹினி, அவகேடோ, டோபு போன்றவற்றை பயன்படுத்தலாம் என்று சில உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.