வருசநாடு, நவ. 8: மயிலாடும்பாறை அருகே பாசிபடர்ந்த தரைப்பாலத்தில் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட பின்னத்தேவன்பட்டியில் சாலையின் குறுக்கே பெரிய ஓடை உள்ளது. இந்த ஓடையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. உப்புத்துறை கருப்பையாபுரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஓடையில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் தரைப்பாலம் முழுவதும் பாசிகள் படர்ந்து காணப்படுகிறது.
எனவே தரைப்பாலம் வழியாக செல்லும் பைக், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் பாசிகளால் வழுக்கி நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதி வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால் உப்புத்துறை, ஆட்டுப்பாறை, ஆத்துக்காடு, கருப்பையாபுரம், பாம்பாடும்பாறை புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் மாற்றுப்பாதை வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தில் வளர்ந்துள்ள பாசிகளை அகற்ற வேண்டும். மேலும் தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மயிலாடும்பாறை அருகே பாசிபடர்ந்த தரைப்பாலத்தில் விபத்து அபாயம்: சரி செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.