திருப்பாவை எனும் தேனமுதம்

2 hours ago 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று தொடங்குகிறாள். மார்கழித் திங்கள்- மார்கழி மாதம், ஹேமந்த ருது என்றாலே குளிர்காலம் என்று பொருள். எல்லோருக்குமே தெரியும்… மார்கழி என்றாலே அது குளிர்காலம்தான். அதுமட்டுமல்லாமல் தேவர்களுக்கு இது பிரம்ம முகூர்த்த காலமாகவும் இருக்கிறது. நாம் எப்படி அதிகாலை நான்கரை முதல் ஆறரை மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்கிறோமோ, அதுபோல தேவர்களுக்கு இது பிரம்ம முகூர்த்த காலமாகும். இப்படிச் சொல்லிவிட்டு நேரிழையீர் என்கிறாள். நேரிழையீர் என்று சொல்லும்போது அங்கு என்ன பொருள் வருகிறதெனில், மிகுந்த உயர்ந்த, அழகான, ஆபரணங்களையெல்லாம் அணிந்திருக்கக் கூடியவர்களே என்கிறாள்.

ஆபரணங்களையெல்லாம் அணிந்திருக்கிறவர்களே என்று தோழிகளாக யாரை அழைக்கிறாள் எனில், நம்மைத்தான் அழைக்கிறாள். ஜீவாத்மாக்களைத்தான். நேரிழையீர்… என்று மரியாதையாக ஏன் அழைக்க வேண்டும்? எப்போது ஒருவன் திருப்பாவையை எடுத்து மார்கழித்திங்கள் என்று ஆரம்பிக்கிறானோ… அந்தக் கணமே அவனுக்கு ஞானம், பக்தி, வைராக்கியம் போன்றவை எல்லாம் சித்தித்து விட்டதாம். அதனால், அவன் சாதாரணமாக இல்லை. ஞானம், பக்தி, ஆபரணத்தோடு இருப்பதால் ஆண்டாள் இங்கு நேரிழையீர் என்கிறாள். மார்கழித்திங்கள் என்று தொடங்கும்போதே…அவனுக்குள் ஞானம் பக்தி வைராக்கியமெல்லாம் இருக்கிறது… ஆனால், அது அவனுக்கு தெரியவில்லை. ஆசார்ய சம்மந்தத்தினால் ஆசார்யன் காண்பித்துக் கொடுப்பார்.

நீ புதிதாக எதையும் அடையப் போவதில்லை. அடுத்ததாக, சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!இங்கு சிறுமீர்காள் என்று சொல்கிறாள். தோழிகளைக் கூப்பிடும்போது மரியாதையாக வாங்கோ என்றா கூப்பிடுவோம். ஒரு உரிமையோடு ஏய்… வா… குளிக்கப் போகலாம் என்றுதானே கூப்பிடுவோம். ஆனால், தாயார் இங்கு செல்வச் சிறுமீர் காள் என்று மிகுந்த மரியாதையோடு கூப்பிடுகிறாள். இங்கு எதற்கு மரியாதையாக கூப்பிட வேண்டுமெனில், நீரிழையீர் என்று சொல்லும்போது…. எப்படி இவனுக்கு ஞான, பக்தி, வைராக்கியம் என்கிற பூஷணங்கள் வந்துவிட்டதோ…அதேபோன்று தாயார் இங்கு சொல்கிறாள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் நம்முடைய தோழிகளாக இருந்தால் கூட, இங்கு எதற்காக கூப்பிடுகிறோமெனில் எவன் பறை தருவானோ அவனை அடைவதற்கு கூப்பிடுகிறோம். பறை தருவதற்குஒருவரை கூப்பிடுகிறோமெனில், அவர்கள் பாகவதர்கள்.

அப்படி பாகவதர்கள் என்று மட்டுமில்லாமல் இப்போது நேரிழையீர் என்றும் சொல்லி விட்டாள். மார்கழித்திங்கள் என்று சொன்ன தனால்… ஞான, பக்தி, வைராக்கியம் சித்தித்திருக்கிறது. இவ்வளவும் நடந்திருப்பதால் அவர்களை சாதாரணமான ஜீவாத்மாக்களாக தாயார் பார்க்காமல், நீங்களெல்லாம் அந்த பரம பதத்திற்கு உரியவர்கள் என்று அதற்குரிய கௌரவத்தோடு தாயார் கூப்பிடுகிறாள். ஏனெனில், இங்கு செய்யப்போகிற விஷயம் உயர்ந்த விஷயம். அதற்கு ஒருவரைகூப்பிட வேண்டுமெனில் அதற்குரிய மரியாதையோடுதான் கூப்பிட வேண்டும். நாம் செய்யப்போகிற விரதத்திற்கு, காத்யாயனி விரதத்திற்கும் அதன் மூலமாக அடையப்போகக் கூடியவன் யாரெனில், பறை தரக்கூடியவன்.பரமபதநாதன். அந்தப் பரமபதநாதனின் விஷயம் உயர்ந்த விஷயமாக இருப்பதால் மரியாதையாக கூப்பிடுகிறாள். அதுவே இங்கு சரியான வழிமுறையும் கூட என்று செல்வச் சிறுமீர்காள் என்கிறாள்.

இப்போது இன்னொரு வார்த்தையைப் பாருங்கள். சீர்மல்கும் ஆய்ப்பாடி… எப்போது திருப்பாவையை பாட ஆரம்பித்தாளோ அப்போதே ஸ்ரீ வில்லிபுத்தூர் கோகுலமாக மாறி விட்டது. வடபத்ரசாயி கோயிலானது நந்தகோபன் வீடாகிவிட்டது. உள்ளே படுத்துக்கொண்டிருக்கிற வட பத்ரசாயி உள்ளே படுத்துக்கொண்டி ருக்கிற கிருஷ்ணன்… நந்தகோபன், பலராமன், யசோதா என்று எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள். அதனால், ஸ்ரீ வில்லிபுத்தூரையே ஆண்டாள் ஆய்ப்பாடியாகத்தான் இங்கு பாடுகிறாள். அப்படிப் பாடும்போது திரு அல்லது திருவாய்பாடி என்று சொல்ல வேண்டும். ஆனால், தாயார் இங்கு சீர்மல்கும் ஆய்ப்பாடி… திரு என்பதையும் தாண்டி சீர் மல்கும் ஆய்ப்பாடிஎன்கிறாள். இது எதை காண்பித்துக் கொடுக்கிறதெனில், சமஸ்கிருதத்தில் ஸ்ரீ மத் என்கிற வார்த்தை உண்டு.

ஸ்ரீ மந் நாராயணன், ஸ்ரீ மத் பாகவதம்… என்று எந்தவொரு உயர்ந்த விஷயத்தைசொன்னாலும் ஸ்ரீ மத் என்று சொல்வோம். இங்கு உயர்வு எங்கு பொருந்தியிருக்கிறதோ அது ஸ்ரீ மத் என்று சொல்கிறோம். தாயார் ஸ்ரீ மத் என்கிற சப்தத்தை… தமிழில் சீர் மல்கும் ஆய்ப்பாடிஎன்கிறாள். இங்கு ஏன் சீர் மல்கும் ஆய்ப்பாடி? இங்கு பாடப்படும் விஷயமானது பரமபத நாதனை குறித்துத்தான். பறை தரக்கூடியவன். அவன் இந்த பரம பதத்தில் இந்த ஜீவாத்மாக்களுக்கு மோட்சம் தரக்கூடியவன். அப்படி மோட்சம் கொடுக்கும்போது இந்த பரமபதத்தில் பரமபத நாதனாக இருக்கும்போது, அவனுக்குரிய குணம் என்பது அவனுடைய பரத்துவமே ஆகும். எல்லாவற்றிற்கும் தலைமை. அந்த பரத்துவத்திற்குள்ளே அவனிடத்தில் இருக்கக்கூடிய அனந்த கல்யாணக்குணங்கள் எல்லாமே, பரத்துவம் என்கிற ஒரு குணத்திற்கு அடங்கி விடுகின்றது.

பரமபதத்திற்குச் சென்று அவன் வெண்ணெய் திருடுகிற அழகை பார்க்க முடியுமா! பரம பதத்தில் போய் யாராவது வெண்ணெயை ஊட்டிவிட முடியுமா? பரமபதத்திற்குச் சென்று நிவேதனாதிகளெல்லாம் செய்ய முடியுமா? கோபிகைகளோடு விளையாடுவதைப் பார்க்கமுடியுமா? பரமபதத்தில் நித்ய சூரிகள் சேவிக்கும்போது ஆதிசேஷ பரியங்கத்தின் மீது இருக்கும்போது அப்படி சேவிப்பதே ஆனந்தமாக இருக்குமே தவிர… அங்கு வேறு எந்தவிதமான லீலைகளும் நடக்காது. ஆனால், ஆய்ப்பாடியில் வரும்போது வெண்ணெயை திருடுகிறான். அப்படி வெண்ணெயை திருடுகிற சாக்கில் மனசைத் திருடுகிறான். கோபிகைகளோடு விளையாடுகிறான். ராசக்கிரீடை நடக்கிறது. எல்லோரும் இவன் சேட்டைகளை பார்த்து யசோதாவிடம் வந்து சொல்கிறார்கள்… இப்படி எத்தனை எளிமையாக அவன் வருகின்றான். இப்படி சௌலப்ய… சௌசீல்யாதி குணங்களெல்லாம் பரமபதத்தில் வெளிப்படவில்லை. ஆய்ப்பாடியில்தான் வெளிப்பட்டது.

(தொடரும்)

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

The post திருப்பாவை எனும் தேனமுதம் appeared first on Dinakaran.

Read Entire Article